அடையாறு ஆற்றில் பாலம் கட்டும் பணிக்காக அமைத்த தற்காலிக சாலை மழைநீரில் அடித்து செல்லப்பட்டது போக்குவரத்து துண்டிப்பு


அடையாறு ஆற்றில் பாலம் கட்டும் பணிக்காக அமைத்த தற்காலிக சாலை மழைநீரில் அடித்து செல்லப்பட்டது போக்குவரத்து துண்டிப்பு
x
தினத்தந்தி 24 Nov 2018 4:00 AM IST (Updated: 24 Nov 2018 1:28 AM IST)
t-max-icont-min-icon

தாம்பரத்தில் இருந்து சோமங்கலம் செல்லும் சாலையில் அடையாறு ஆற்றில் பாலம் கட்டும் பணிக்காக அமைக்கப்பட்ட தற்காலிக சாலை மழைநீரால் அடித்து செல்லப்பட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

தாம்பரம்,

சென்னை புறநகர் பகுதிகளில் கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் காரணமாக அடையாறு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள குறுகலான பாலங்களை இடித்து விட்டு, அகலமான பாலங்களாக அமைக்கும்படி நெடுஞ்சாலைத் துறையினருக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்படி ஆதனூர் சாலை, மணிமங்கலம் சாலை, தாம்பரம்-சோமங்கலம் சாலை, திருநீர்மலை-திருமுடிவாக்கம் ஆகிய சாலைகளில் அடையாறு ஆற்றின் குறுக்கே உள்ள குறுகலான பாலங்களை இடித்து விட்டு ரூ.10 கோடியே 48 லட்சத்தில் புதிய பாலங்கள் அமைக்க டெண்டர் விடப்பட்டது.

தற்போது ஆதனூர் சாலை, மணிமங்கலம் சாலை, தாம்பரம்-சோமங்கலம் சாலை ஆகிய 3 இடங்களில் பழைய பாலங்கள் இடிக்கப்பட்டு, புதிய பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்டு மாதம் தொடங்கிய இந்த பணிகளை 9 மாதங்களில் முடிக்க நெடுஞ்சாலைத் துறையினர் திட்டமிட்டு உள்ளனர்.

இதற்காக பழைய பாலங்கள் இடிக்கப்பட்ட இடத்தின் அருகேயே வாகனபோக்குவரத்துக்காக அடையாறு ஆற்றின் குறுக்கே தற்காலிக சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஆற்றில் தண்ணீர் தடை இன்றி செல்வதற்காக குழாய்கள் அமைக்கப்பட்டு, அதன் மீது தற்காலிக சாலை போடப்பட்டு உள்ளது.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக இந்த பாலம் அமைக்கும் பணிகள் தடைபட்டு உள்ளது. பெருங்களத்தூர், முடிச்சூர், வரதராஜபுரம், தாம்பரம் பகுதிகளில் இருந்து மழைநீர் முழுவதும் கடந்த 3 நாட்களாக அடையாறு ஆற்றில் அதிகளவில் வந்து சேர்ந்தது.

இதனால் தாம்பரம்- சோமங்கலம் சாலையில் தற்காலிக சாலையின் அடியில் அமைக்கப்பட்டு இருந்த குழாய்கள் வழியாக மழைநீர் சென்றாலும், தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால் தற் காலிக சாலையை மழைநீர் அடித்து சென்றுவிட்டது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

தாம்பரத்தில் இருந்து நடுவீரப்பட்டு, சோமங்கலம், பூந்தண்டலம் செல்லும் வாகனங்கள் பைபாஸ் சாலை சர்வீஸ் சாலை வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டது.

இதையடுத்து அந்த பகுதி மக்களே, நடந்து செல்லும் வகையில் ஆற்றின் குறுக்கே பலகை மற்றும் சிமெண்டு ஓடுகளை போட்டும், தற்காலிக சாலையோரம் கம்பால் தடுப்புகளும் அமைத்தனர். இதையடுத்து மழைநீரால் அடித்து செல்லப்பட்ட தற்காலிக சாலையை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
அடையாறு ஆற்றில் மழைநீர் அதிகமாக வந்ததால் தற்காலிக சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டது. எனவே தண்ணீரை வேகமாக வெளியேற்ற அந்த பகுதியில் அமைக்கப்பட்ட குழாய்களை அகற்றினோம். தற்காலிக சாலையை சீரமைக்கும் பணிகள் நடைபெறுகிறது.

ஏற்கனவே 3 அடி சுற்றளவு உள்ள குழாய்கள் அமைக்கப்பட்டு இருந்தது. அதிக வெள்ளம் வரும்போது பாதிப்பு ஏற்படுவதால் 5 அடி சுற்றளவு உள்ள வீராணம் குழாய்களை மாமல்லபுரத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு தற் காலிக சாலை நாளைக்குள் (இன்று) சீரமைக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, “சாலையை உடனடியாக சீரமைக்கவேண்டும். பெட்ரோல் விற்கும் விலையில் 5 கிலோ மீட்டர் சுற்றி கொண்டு சென்று வரவேண்டியது உள்ளது. ஷேர் ஆட்டோக்கள், பஸ்கள் இந்த சாலையில் வராததால் நடுத்தர மக்கள் அவதிப்பட்டு வருகிறோம்” என்றனர்.

Next Story