காங்கேயத்தில், நடைபயிற்சி சென்றவரிடம் கத்திமுனையில் பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது


காங்கேயத்தில், நடைபயிற்சி சென்றவரிடம் கத்திமுனையில் பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 24 Nov 2018 4:15 AM IST (Updated: 24 Nov 2018 1:29 AM IST)
t-max-icont-min-icon

காங்கேயத்தில் நடை பயிற்சி சென்றவரிடம் கத்திமுனையில் பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

காங்கேயம்,

காங்கேயத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது28). இவர் காங்கேயத்தில் ஜவுளிக்கடை வைத்துள்ளார். இவர் நேற்று காலை சென்னிமலை ரோட்டில் நடைபயிற்சி சென்றார். அப்போது 2 மர்ம ஆசாமிகள் கத்தியை காட்டி மிரட்டி விஜயகுமாரிடம் இருந்த 1500 ரூபாயை பறித்து சென்றனர். இதுகுறித்து விஜயகுமார் காங்கேயம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் காங்கேயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்–இன்ஸ்பெக்டர் பூமிபாலகன் மற்றும் போலீசார் சென்னிமலை சாலையில் 4 ரோடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பஸ்சுக்கு காத்திருந்த 2 மர்ம ஆசாமிகள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் தர்மபுரியை சேர்ந்த பல்லன் என்ற கார்த்தி (27), மற்றொருவர் சேலம் மாவட்டம் வாழப்பாடியை கார்த்திக் (24) என்பது தெரியவந்தது.

மேலும் இவர்கள் 2 பேரும் விஜயகுமாரிடம் கத்திமுனையில் பணம் பறித்ததையும் கடந்த 23.10.2018 அன்று திருப்பூரை சேர்ந்த பூங்கொடி என்ற பெண்ணிடம் 4 பவுன் நகையை பறித்து சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து காங்கேயம் போலீசார் 2 பேரையும் கைது செய்து திருப்பூர் பெருமாநல்லூர் அய்யம்பாளையத்தில் அவர்கள் தங்கி இருந்த இடத்தில் வைத்திருந்த நகையையும் மீட்டனர். கைது செய்யப்பட்ட 2 பேரும் பல்லடம் மாஜிஸ்திரேட்டு ராஜமகேஷ் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட பல்லன் என்ற கார்த்தி மற்றும் கார்த்திக் ஆகிய 2 பேர் மீதும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் இருப்பதும் இவர்கள் இருவரும் ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.


Next Story