அலகுமலை கோவில் கம்பி வேலி அகற்றப்பட்ட விவகாரம்: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர், கலெக்டர் நேரில் ஆய்வு
அலகுமலை கோவில் கம்பி வேலி அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் முருகன், கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். இருதரப்பு மக்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
பொங்கலூர்,
திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் அருகே அலகுமலையில் புகழ்பெற்ற கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் முன்பகுதியில் உள்ள காலி இடத்தில் நிறைய மரங்கள் வைத்து வளர்க்கப்பட்டுள்ளதுடன், கிழக்கு பகுதியில் தேர் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த கோவில் வளாகத்தில் இரவு நேரங்களில் சமூக விரோத சம்பவங்கள் நடைபெறுவதாகவும், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தேருக்கு பாதுகாப்பு இல்லை என்றும் புகார் சென்றது.
இதைத்தொடர்ந்து கோவிலின் முன் பகுதியில் அறநிலையத்துறை சார்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கம்பி வேலி அமைக்கப்பட்டது. இதற்கு அந்த பகுதியில் குடியிருக்கும் ஒரு சமூகத்தை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூறும்போது, இந்த வழியாக நடந்தும், வாகனங்களிலும் சென்று வந்ததாகவும், தற்போது கம்பி வேலி அமைக்கப்பட்டதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.மேலும் கம்பி வேலி அமைக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவிப்பட்டிருந்தது.
இதுகுறித்து அறநிலையத்துறையினர் கூறும் போது, இந்த இடம் அறநிலையத்துறைக்கு சொந்தமானது. எனவே கோவிலின் பாதுகாப்பு கருதி கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சென்று வர 10 அடி தூரத்தில் கம்பி வேலியின் அருகிலேயே தார்ச்சாலை செல்கிறது. அதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றனர்.
இது குறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்ட சப்–கலெக்டர் ஷ்வரன்குமார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார். பின்னர் அந்த வழியாக செல்லும் கான்கிரீட் சாலையின் அகலத்திற்கு மட்டும் கம்பி வேலியை அகற்ற அவர் உத்தரவிட்டார். இதற்கு அந்த பகுதியை சேர்ந்த மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதையும் மீறி போலீஸ் பாதுகாப்புடன் கம்பி வேலி அகற்றப்பட்டது. ஆனால் கம்பி வேலி அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கேயே 50–க்கும் மேற்பட்டவர்கள் முற்றுகையிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இது தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்கு புகார் சென்றது. அதன் அடிப்படையில் நேற்று மதியம் சுமார் 2 மணியளவில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைத்தின் துணைத்தலைவர் முருகன், கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆகியோர் அலகுமலையில் உள்ள கைலாசநாதர் கோவில் பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இருதரப்பு மக்களிடமும் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கம்பி வேலி அமைத்ததால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஒரு தரப்பு மக்கள் கருத்து தெரிவித்தனர்.
மற்றொரு தரப்பு மக்கள் கூறும்போது, கோவிலின் பாதுகாப்பு மற்றும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தேருக்கு பாதுகாப்பு கருதித்தான் கம்பி வேலி அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் இந்த பகுதியில் இரவு நேரங்களில் சமூக விரோத சம்பவங்களும் நடைபெற்றதால் கம்பி வேலி அமைக்கப்பட்டது. எனவே குறிப்பிட்ட இடத்தில் அகற்றப்பட்ட கம்பி வேலியை மீண்டும் அமைக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இரு தரப்பினரிடம் கருத்துகளை கேட்ட துணைத்தலைவர் முருகன் விரைவில் இதுகுறித்து நல்ல தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார்.
இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி, அறநிலையத்துறை உதவி ஆணையர் ஹர்சினி, பல்லடம் போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் எல்.முருகன் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். பின்னர் அவர் பேசும் போது அரசின் திட்டங்களை தெரிந்து கொண்டு அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.