துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை பொதுமக்கள் முற்றுகை புதுக்கோட்டையில் பரபரப்பு


துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை பொதுமக்கள் முற்றுகை புதுக்கோட்டையில் பரபரப்பு
x
தினத்தந்தி 23 Nov 2018 11:15 PM GMT (Updated: 23 Nov 2018 8:11 PM GMT)

புதுக்கோட்டையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வந்த துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை மாவட்டத்தை கடந்த 16-ந் தேதி அதிகாலையில் கஜா புயல் தாக்கியது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லட்சக்கணக்கான மரங்கள், ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள், மின்மாற்றிகள் போன்றவை சாய்ந்தன. இதையடுத்து கடந்த 7 நாட்களாக மாவட்ட நிர்வாகம், அமைச்சர்கள், கண்காணிப்பு அதிகாரிகள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 20-ந் தேதி திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்திற்கு வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் புதுக்கோட்டை மாப்பிள்ளையார்குளம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார்கள்.

இந்நிலையில் நேற்று முன்தினம் திருச்சி விமான நிலையத்தில் இருந்து காரில் வந்த துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள களமாவூர், கீரனூர், குளத்தூர், அருந்ததியினர் காலனி, அடப்பன்காரச்சத்திரம், திருவப்பூர் ஆகிய பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் அவர் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற கஜா புயல் மீட்பு பணிகளின் முன்னேற்றம் குறித்து அரசு அலுவலர்களுடனான கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். இதைத்தொடர்ந்து இரவு புதுக்கோட்டை கீழராஜவீதியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கினார்.

பின்னர் நேற்று காலை கந்தர்வகோட்டை பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக, அவர் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து புறப்பட்டு காரின் அருகே வந்தார். அப்போது அங்கு வந்த புதுக்கோட்டை காமராஜபுரம், காந்திநகர், போஸ்நகர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், புயலால் எங்கள் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதுவரை எந்த ஒரு அரசு அதிகாரிகளும், எங்களது பகுதிகளை வந்து பார்வையிடவில்லை. எங்கள் பகுதியில் குடிநீர் வசதி இல்லை. மின்வினியோகம் வழங்கப்படவில்லை. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை முற்றுகையிட்டனர்.

அவர்களிடம், “உடனடியாக உங்கள் பகுதிக்கு அதிகாரிகள் வந்து, ஆய்வு செய்ய ஏற்பாடு செய்கிறேன்” என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். பின்னர் அங்கிருந்து காரில் ஏறி கந்தர்வகோட்டை பகுதிக்கு சென்றார். இந்த சம்பவத்தால் புதுக்கோட்டை கீழராஜவீதி பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

Next Story