மழையால் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படும்; அமைச்சர் கந்தசாமி உறுதி


மழையால் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படும்; அமைச்சர் கந்தசாமி உறுதி
x
தினத்தந்தி 24 Nov 2018 3:30 AM IST (Updated: 24 Nov 2018 1:44 AM IST)
t-max-icont-min-icon

மழையால் சேதமடைந்த சாலைகள் விரைவில் சீரமைக்கப்படும் என்று அமைச்சர் கந்தசாமி கூறினார்.

பாகூர்.

பாகூர் பகுதியில் கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்தது. இதன் காரணமாக பாகூர் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள 12 ஏரிகள் நிரம்பின. மேலும் பல்வேறு ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மாநிலத்தின் 2–வது பெரிய ஏரியான பாகூர் ஏரியின் நீர்மட்டம் 1.72 மீட்டராக உயர்ந்துள்ளது. ஏரியின் மொத்த நீர்மட்டம் 3 மீட்டராகும். நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை வரை 57 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது.

தொடர் மழை காரணமாக பாகூர் பகுதியில் தாழ்வான குடியிருப்புகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். கிராமப்புற சாலைகளில் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. விளை நிலங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இந்தநிலையில் ஏம்பலம் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் அமைச்சர் கந்தசாமி நேரில் சென்று மழை சேதங்களை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். பிள்ளையார்குப்பத்தில் மழையால் குண்டும் குழியுமாக மாறியுள்ள சாலையை சீரமைக்கவேண்டும், இடிந்து விழும் முன் அரசு பள்ளி அருகே உள்ள பழைய வானொலி நிலைய கட்டிடத்தை அகற்றவேண்டும் என்று கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் கந்தசாமி, மழையால் சேதமான சாலைகள் விரைவில் சீரமைக்கப்படும், தாழ்வான பகுதியில் தேங்கியுள்ள தண்ணீர் ராட்சத மோட்டார்கள் மூலம் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக செய்து கொடுக்குமாறு அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுரேஷ், உதவி பொறியாளர் சுந்தர்ராஜ், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சவுந்தரராஜன் உதவிப்பொறியாளர் தமிழரசன், தாசில்தார் கார்த்திகேயன், நீர்ப்பாசன பிரிவு உதவி பொறியாளர் சங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story