பொதுப்பணித்துறையில் பயோமெட்ரிக் வருகைப்பதிவேடு; கவர்னர் கிரண்பெடி அதிரடி


பொதுப்பணித்துறையில் பயோமெட்ரிக் வருகைப்பதிவேடு; கவர்னர் கிரண்பெடி அதிரடி
x
தினத்தந்தி 24 Nov 2018 4:00 AM IST (Updated: 24 Nov 2018 1:44 AM IST)
t-max-icont-min-icon

பொதுப்பணித்துறையில் பயோமெடரிக் முறை வருகிற 1–ந்தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று கவர்னர் கிரண்பெடி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி

புதுவை கவர்னர் கிரண்பெடி கடந்த சில நாட்களாக அரசு அலுவலகங்களுக்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்துக்கு வந்து ஆய்வுகளை மேற்கொண்டார்.

பின்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை பொறியாளர் சண்முகசுந்தரம் மற்றும் கண்காணிப்பு பொறியாளர், செயற்பொறியாளர், உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர் என அனைத்து பிரிவு அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தின்போது கவர்னர் கிரண்பெடி, பொதுப்பணித்துறை செயலாளர், தலைமை பொறியாளர் ஆகியோரின் அனுமதியின்றி ஊழியர்கள் யாரையும் வேறு பணிக்கு அனுப்பக்கூடாது என்றும் பல்நோக்கு ஊழியர்கள் அனைவரும் தூர்வாருதல், பராமரித்தல் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

வருகிற 1–ந்தேதி முதல் பயோமெட்ரிக் வருகைப்பதிவேடு முறை கடைபிடிக்கப்படும். இளநிலை பொறியாளர்கள் முதல் அனைத்து அதிகாரிகளும் தங்கள் பணியிடங்கள் குறித்து வாட்ஸ்அப் மூலம் தகவல் தெரிவிக்கவேண்டும். அவர்கள் பணியிடத்தில் இருப்பது தொடர்பாக தெரிவிக்க தனியாக செயலி உருவாக்கி தரப்படும் என்றும் கூறினார்.

தங்களுக்கு கீழ் பணியாற்றும் ஊழியர்களை அதிகாரிகள் மாதத்தில் ஒருமுறை அழைத்துப்பேசவேண்டும். அப்போது யாராவது வராதிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து இளநிலை பொறியாளர்களும் மத்திய பொதுப்பணித்துறை அல்லது பெரிய கம்பெனிகளுக்கு பயிற்சிக்கு சென்று தங்களது திறமைகளை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.


Next Story