கழிவுநீர் வாய்க்கால்களில் கவர்னர் கிரண்பெடி ஆய்வு; மழைவெள்ளம் வடிவதை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு
கழிவுநீர் வாய்க்கால்களை ஆய்வு செய்த கவர்னர் கிரண்பெடி, மழை வெள்ளம் வடிவதை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
புதுச்சேரி,
காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுவையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக தாழ்வான இடங்களில் மழை வெள்ளம் தேங்கியது. கழிவுநீர் வாய்க்கால்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் கழிவுநீர் வாய்க்கால்களில் இருந்து வெளியேறிய மழைநீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது.
இந்த நிலையில் கவர்னர் கிரண்பெடி நகரப்பகுதியில் உள்ள வாய்க்கால்களில் ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக நெல்லித்தோப்பு பகுதி வாய்க்கால், பூமியான்பேட்டை, பாவாணர் நகர் வாய்க்கால் பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதை அவர் பார்வையிட்டார்.
சில இடங்களில் வாய்க்கால்களில் அடைப்புகள் இருப்பதை கண்ட கவர்னர், அவற்றை உடனடியாக சரிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் தேங்கியிருப்பதை மோட்டார்கள் கொண்டு வெளியேற்றவும் உத்தரவிட்டார்.
நெல்லித்தோப்பு, பாவாணர் நகர் பகுதிகளில் ராட்சத மோட்டார்கள் மூலம் மழைநீரை வெளியேற்றுவதை கண்ட கவர்னர் கிரண்பெடி பணிகளை துரிதப்படுத்துமாறும் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.