கார்த்திகை திருநாளை முன்னிட்டு நெல்லையப்பர் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது


கார்த்திகை திருநாளை முன்னிட்டு நெல்லையப்பர் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது
x
தினத்தந்தி 24 Nov 2018 3:30 AM IST (Updated: 24 Nov 2018 1:49 AM IST)
t-max-icont-min-icon

கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு நெல்லையப்பர் கோவிலில் நேற்று இரவில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

நெல்லை, 

கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு நெல்லையப்பர் கோவிலில் நேற்று இரவில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

நெல்லையப்பர் கோவில்

கார்த்திகை தீப திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நெல்லையப்பர் கோவிலில் சுவாமி சன்னதி முன்பு நேற்று முன்தினம் பரணி தீபம் ஏற்பட்டது. அணையா தீபமாக நேற்று முழுவதும் ஒளி வீசியது. அந்த பரணி தீபத்தில் இருந்து நேற்று மாலை தீபம் கொண்டு வரப்பட்டது.

தொடர்ந்து நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளினர். பின்னர் சுவாமி, அம்பாள் வீதி உலா நடந்தது. அவர்கள் இரவு 8.30 மணி அளவில் நெல்லை டவுன் பாரதியார் தெரு முக்கு வந்தனர்.

அங்கு நெல்லையப்பர் கோவில் சார்பில் சொக்கப்பனை அமைக்கப்பட்டு இருந்தது. அதில் பரணி தீபத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட தீபத்தால் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தச்சநல்லூர்

நெல்லை தச்சநல்லூரில் நெல்லையப்பர்-காந்திமதி அம்மாள் கோவில் உள்ளது. மிகவும் பழமையான இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப திருவிழா நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் அருட்பணி மன்றம் சார்பில் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி சுவாமி-அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் சிறப்பு அலங்காரம், சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் மாலையில் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

நேற்று காலையில் சுவாமி, அம்பாள், பவானி, சந்திரசேகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பம் வைத்து சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. மாலையில் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்பட்டது.

பின்னர் பவானி, சந்திரசேகர் ரிஷப வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளினர். வீதி உலா முடிந்து சுவாமிகள் தேரடி திடலை வந்தடைந்தனர்.

அங்கு 25 அடி உயர ராட்சத சொக்கப்பனை அமைக்கப்பட்டு இருந்தது. கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்ட தீப ஒளி மூலம் சொக்கப்பனையில் தீபம் ஏற்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் தேவி மற்றும் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் அருட்பணி மன்றத்தினர் செய்து இருந்தனர்.

வீடுகள்

அதேபோல் பாளையங்கோட்டை சிவன்கோவில், நெல்லை சந்திப்பு சாலைகுமாரசாமி கோவில், குறிச்சி சொக்கநாதர் கோவில், கொக்கிரகுளம் காசிவிசுவநாதர் கோவில், வண்ணார்பேட்டை அண்ணாமலையார் கோவில் மற்றும் அம்மன் கோவில்கள் முன்பு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அதேபோல் நெல்லை மாநகர பகுதியில் உள்ள வீடுகளில் கார்த்திகை தீபம் ஏற்பட்டது. அகல் விளக்கு, மெழுகுவர்த்தி ஏற்றி பெண்கள் வீட்டு முன்பு வைத்து இருந்தனர். பல்வேறு கடைகளிலும் தீபம் ஏற்றபட்டது.

Next Story