புதுக்கோட்டை மாவட்டத்தில் நகரப்பகுதிகளுக்கு 90 சதவீதம் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி
புதுக்கோட்டை மாவட்டத்தில் நகரப்பகுதிகளுக்கு 90 சதவீதம் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.
புதுக்கோட்டை,
கஜா புயலால் பாதிக்கப்பட்ட கந்தர்வகோட்டை பகுதிகளில் நடந்து வரும் சீரமைப்பு பணிகளை அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர்், டாக்டர் சி.விஜயபாஸ்கர், பாலகிருஷ்ணரெட்டி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் கந்தர்வகோட்டை தாசில்தார் அலுவலகம் அருகே சாய்ந்து கிடந்த மின்கம்பங்களை அகற்றி பொக்லைன் எந்திரங்க ளின் உதவியுடன் புதிய மின்கம்பங்கள் நடும் பணிகளில் கேரள மாநிலத்தை சேர்ந்த மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், அவர்கள் பணியாற்றியதை பார்வையிட்ட அமைச்சர், மின்வாரிய ஊழியர்களை பாராட்டினர்.
பின்னர் அமைச்சர் எம்.ஆர்.விஜயாஸ்கர் கூறியதாவது;-
மின்கம்பங்களை சீரமைக்கும் பணிகளுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா மாநிலங்களில் இருந்தும் மின்வாரிய பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து பகுதிகளிலும் மின்கம்பங்களை சீர் செய்து மின் வினியோகம் வழங்கும் பணியும், சாய்ந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்தும் பணியும், பாதிக்கப்பட்ட பயிர்கள், வீடுகள் குறித்த சேத மதிப்பீடுகளை கணக்கெடுக்கும் பணியும், குடியிருப்புகளுக்கு சுழற்சி முறையில் குடிநீர் வினியோகம் செய்யும் பணியும், பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் பணியும் போர்க்கால அடிப்படையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நகரப்பகுதியில் 90 சதவீத புதிய மின் கம்பங்கள் நடப்பட்டு மின் இணைப்பு வழங்கப்பட்டுவிட்டது. கிராமப்பகுதிகளில் சுமார் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதால், அவற்றை சீர்செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இன்னும் ஓரிரு நாட்களுக்குள் பெரும்பான்மையான பகுதிகளுக்கும் முழுமையாக மின் வினியோகம் செய்யும் வகையில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ், புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஷம்புகல்லோலிகர் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story