விருதுநகரில் குடிநீர் வினியோகத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்காத நகராட்சி நிர்வாகம்


விருதுநகரில் குடிநீர் வினியோகத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்காத நகராட்சி நிர்வாகம்
x
தினத்தந்தி 24 Nov 2018 3:45 AM IST (Updated: 24 Nov 2018 1:52 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படும் நிலையில் குடிநீர் வினியோகத்தை மேம்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத நிலை உள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் நகராட்சி பகுதிக்கு குடிநீர் வினியோகத்துக்காக நிலத்தடி நீர் ஆதாரங்களாக ஆனைக்குட்டம் அணைப்பகுதியில் உள்ள உறை கிணறுகள், காரிசேரி, ஒண்டிப்புலி கல்குவாரிகள், சுக்கிரவார்பட்டி கோடைகால குடிநீர் தேக்கம் ஆகியவை பயன்பட்டு வருகின்றன. இந்த நிலத்தடி நீர் ஆதாரங்களுடன் தற்போது தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இருந்து குடிநீர் கிடைக்கும் நிலை உள்ளது.

தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்ட போது தினசரி 40 லட்சம் லிட்டர் முதல் 45 லட்சம் லிட்டர் தண்ணீர் வரை கிடைக்கும் என உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் நடைமுறையில் 25 லட்சம் லிட்டர் முதல் 30 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே கிடைக்கும் நிலை இருந்து வருகிறது. நிலத்தடி நீர் ஆதாரங்களில் இருந்து தினசரி 20 லட்சம் லிட்டர் முதல் 25 லட்சம் லிட்டர் தண்ணீர் வரை கிடைத்து வருகிறது.

இந்தநிலையில் நகராட்சி பகுதியில் 7 நாட்கள் முதல் 10 நாட்கள் வரையிலான இடைவெளியில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் நடைமுறை பிரச்சினை ஏற்பட்டால் வினியோக இடைவெளி நாட்கள் அதிகரிக்கும் நிலையும் ஏற்படுகிறது. நீண்ட நாட்களாக குடிநீர் வினியோக நாட்களின் இடைவெளிகளை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு வந்த போதிலும் இந்தநகராட்சி நிர்வாகம் அதற்கான முயற்சிகள் ஏதும் எடுக்க தயார் இல்லை. நகரின் சில பகுதிகளில் தொடர்ச்சியாக குடிநீர் வினியோகம் செய்யப்படாத நிலையில் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டிய நிர்பந்தமும் ஏற்படுகிறது.

விருதுநகரில் குடிநீர் வினியோகத்தை சீரமைக்க ரூ.21 கோடியில் புனரமைப்பு திட்டம் ஒன்றை செயல்படுத்த அரசு திட்டமிட்டது. தனியார் நிறுவனம் மூலம் இதற்கான ஆய்வுகள் நடத்தப்பட்ட போதிலும் திடீரென இத்திட்டம் கைவிடப்பட்டது. ஆனாலும் குடிநீர் வினியோ கத்தை சீரமைப்பதற்காக நகராட்சி நூற்றாண்டு சிறப்பு நிதியில் இருந்து 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள 3 மேல்நிலை குடிநீர் தொட்டிகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டப்பணிகளும் தொடங்கப்பட்டன. ஆனாலும் திட்டப்பணி தொடங்கி 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் 2 மேல்நிலை குடிநீர் தொட்டிகளின் கட்டுமானபணிகள் 70 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் பணிகள் முடக்கம் அடைந்து விட்டன.

3–வது மேல்நிலை குடிநீர் தொட்டியின் கட்டுமான பணி தொடங்கப்படவே இல்லை. இந்த மேல்நிலை குடிநீர் தொட்டிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து குடிநீர் வினியோகத்தை சீரமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. ஆனால் நகராட்சி நிர்வாகம் இது பற்றி எவ்வித அக்கறையும் கொள்ளாமல் மேல்நிலை குடிநீர் தொட்டிகள் காட்சி பொருளாகவே இருந்து வருகின்றன. இந்த நடைமுறையினை நகராட்சி நிர்வாகம் கடைபிடிப்பது ஏன்? என்று தெரியவில்லை.

மேலும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நகராட்சி பகுதியில் உள்ள 100–க்கும் மேற்பட்ட குடிநீர் வினியோக மண்டலங்களை குறைத்தால் தான் இடைவெளி நாட்களை குறைக்க முடியும் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட நகராட்சி குழு இருந்தபோதே பரிந்துரை செய்ய போதிலும் கவுன்சிலர்களின் தலையீட்டால் மண்டலங்களை குறைக்க முடியவில்லை என அதிகாரிகள் அப்போது தெரிவித்தனர். தற்போதும் நகராட்சி குழு இல்லாத நிலையில் வினியோக மண்டலங்களை குறைக்க நகராட்சி அதிகாரிகள் தயார் இல்லை.

குடிநீர் வினியோக இடைவெளி நாட்கள் அதிகம் உள்ளதால் பொதுமக்கள் 10 நாட்களுக்கு தேவையான குடிநீரை சேமித்து வைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இவ்வாறு சேமித்து வைக்கப்படும் குடிநீரில் டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியாக வாய்ப்பு உள்ளதால் நோய் தொற்று ஏற்படும் நிலையும் உள்ளது. வீடு, வீடாகச் சென்று டெங்கு கொசு புழுக்களை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் குடிநீர் வினியோகம் இடைவெளி நாட்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க தயங்கும் நிலையே இருந்து வருகிறது.

நோய்த் தொற்று அபாயத்தை தவிர்க்கவாவது நகரில் குடிநீர் வினியோக இடைவெளி நாட்களை குறைப்பதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அத்தியாவசிய தேவை ஆகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு விருதுநகர் நகராட்சி நிர்வாகத்தை அறிவுறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


Next Story