கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் மனைவியை கழுத்தை அறுத்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை


கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் மனைவியை கழுத்தை அறுத்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 24 Nov 2018 4:00 AM IST (Updated: 24 Nov 2018 2:01 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, மதுரை கோர்ட்டு தீர்ப்பளித்தது. மேலும் அவர்களின் குழந்தைகளுக்கான கல்வி செலவை அரசு ஏற்கவும் உத்தரவிட்டது.

மதுரை,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அயன்கோவில்பட்டியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 33). அவருடைய மனைவி கனகா(27). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளன. இவர்கள் குடும்பத்துடன் மதுரை பனையூரில் வசித்து வந்தனர்.

முத்துப்பாண்டி அப்பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்தார். அப்போது அங்கு வேலை பார்த்த தங்கம் என்ற தங்கச்செல்வி(25) என்ற பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது.

இவர்களின் கள்ளக்காதல் கனகாவுக்கு தெரியவந்ததால், அது தொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் முத்துப்பாண்டி, தங்கச்செல்வியை 2–வதாக திருமணம் செய்யவும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த முத்துப்பாண்டி 4–2–2012 அன்று இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மனைவி கனகாவை கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

இதுகுறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துப்பாண்டியையும், கொலைக்கு உடந்தையாக இருந்ததாக தங்கச்செல்வியையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு மதுரை மாவட்ட 4–வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மதுசூதனன், முத்துப்பாண்டிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும் கொலை செய்யப்பட்ட கனகாவின் குழந்தைகளின் கல்வி செலவை தமிழக அரசு ஏற்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.


Next Story