நிவாரணம் வழங்குவதில் பாரபட்சம்: கொட்டும் மழையில் பொதுமக்கள் சாலைமறியல்
திருவாரூர் அருகே நிவாரணம் வழங்குவதில் பாரபட்சம் நடப்பதாக கூறி கொட்டும் மழையில் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்,
கஜா புயல் தாக்குதலில் திருவாரூர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு மின்சாரம், குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி லட்சக்கணக்கான பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் அரசு பாதிக்கப்பட்ட பகுதிகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் சேதமடைந்த வீடுகள், கூரைகள், உயிரிழந்த கால்நடைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர். வீடுகள் சேதமடைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் திருவாரூர் அருகே காணூர் கிராமத்தில் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு முறையாக நடைபெறவில்லை. நிவாரணம் வழங்கும்போது பாரபட்சமும், முறைகேடும் நடப்பதாக கூறி கிராமமக்கள் காணூரில் சாலையில் மரத்துண்டுகளை போட்டு கொட்டும் மழையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த திருவாரூர் தாசில்தார் குணசீலி சம்பவ இடத்திற்கு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பாதிப்பு குறித்து முறையாக கணக்கெடுப்பு செய்து பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படும் என உறுதியளித்தார். இதனை தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தினால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோல மின்சாரம் வழங்காததை கண்டித்து முத்துப்பேட்டை பழைய பஸ் நிலையத்தில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் மற்றும் மின்சாரத்துறையினர் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து சாலை மறியலை அவர்கள் கைவிட்டனர். இதனால் பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, வேதாரண்யம் பகுதிக்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து தடைபட்டது. அதனை தொடர்ந்து முத்துப்பேட்டை பகுதியில் நிவாரண பணிகளில் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருவதாக கூறி நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட பொருளாளர் வெற்றி, த.மு.மு.க. தலைவர் சம்சுதீன் ஆகியோர் தலைமையில், ஜாம்புவானோடை ஆசாத்நகர் பகுதி பொதுமக்கள் முத்துப்பேட்டை ஒன்றிய அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த முத்துப்பேட்டை பொறுப்பு அதிகாரியும், திருப்பூர் திட்ட அலுவலருமான ரமேஷ்குமார், வட்ட வழங்கல் அலுவலர் தங்கமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பக்கிரிசாமி, சண்முகம், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அனைத்து கோரிக்கைகளும் உடன் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தனர். இதை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி திருத்துறைப்பூண்டி ராயநல்லூர் கடைத்தெருவில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தபத்மநாபன், ஆலிவலம் சப்-இன்ஸ்பெக்டர் அன்னை அபிராமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் திருத்துறைப்பூண்டி-மன்னார்குடி சாலையில் ½ மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story