6 மாத ஆட்சியை பாதுகாத்ததே சாதனை விவசாயிகள் தற்கொலைக்கு குமாரசாமி தான் காரணம் எடியூரப்பா அறிக்கை


6 மாத ஆட்சியை பாதுகாத்ததே சாதனை விவசாயிகள் தற்கொலைக்கு குமாரசாமி தான் காரணம் எடியூரப்பா அறிக்கை
x
தினத்தந்தி 24 Nov 2018 4:30 AM IST (Updated: 24 Nov 2018 3:19 AM IST)
t-max-icont-min-icon

6 மாதங்கள் ஆட்சியை பாதுகாத்ததே குமாரசாமியின் சாதனை என்றும், விவசாயிகளின் தற்கொலைக்கு குமாரசாமி தான் காரணம் என்றும் எடியூரப்பா கூறினார்.

பெங்களூரு, 

6 மாதங்கள் ஆட்சியை பாதுகாத்ததே குமாரசாமியின் சாதனை என்றும், விவசாயிகளின் தற்கொலைக்கு குமாரசாமி தான் காரணம் என்றும் எடியூரப்பா கூறினார்.

கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறி இருப்பதாவது:-

விவசாயிகள் தற்கொலை

குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி ஏற்று 6 மாதங்கள் ஆகிறது. இதில் அவர் மக்களுக்கு கொடுத்த பொய்யான வாக்குறுதிகள் தான் அவரது சாதனை ஆகும். இந்த 6 மாதங்கள் ஆட்சியை பாதுகாத்துக் கொண்டதே அவரது முக்கிய சாதனை ஆகும்.

இந்த அரசு மக்களுக்கு ஏதாவது நல்லது செய்திருந்தால், விவசாயிகள் எதற்காக தினமும் தற்கொலை செய்து கொள்கிறார்கள்?. இன்று (அதாவதுநேற்று) கூட மண்டியா மற்றும் கலபுரகியில் விவசாயிகள் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர். விவசாயிகள் தற்கொலைக்கு முதல்-மந்திரி குமாரசாமியே காரணம் ஆகும்.

அதிகாரம் தலைக்கு ஏறிவிட்டது

தனது அரசு, சூழ்நிலையால் பிறந்த குழந்தையை போன்றது ஆகும் என்று குமாரசாமியே ஏற்கனவே கூறி இருக்கிறார். இந்த சூழ்நிலையால் பிறந்த குழந்தைக்கு ஏதாவது கொள்கை, கோட்பாடு, இலக்கு இருக்க முடியுமா?.

குமாரசாமி தனது 6 மாத ஆட்சி காலத்தில் பாதி நாட்களை கோவிலுக்கு சென்றும், மீதமுள்ள நாட்களை சொகுசு ஓட்டலிலும் கழித்துள்ளார். பொதுமக்களை குறிப்பாக விவசாயிகளை தரக்குறைவாக பேசியது தான் அவர் செய்த சாதனை. ஆட்சி அதிகாரம், அவரது தலைக்கு ஏறிவிட்டது. அதனால் அவர் அடிக்கடி ஆணவ போக்குடன் பேசுகிறார்.

மண்ணின் மைந்தன்

பிரச்சினைகள் வரும்போது, பதவியை ராஜினாமா செய்துவிட்டு வீட்டுக்கு சென்றுவிடுவேன் என்று குமாரசாமி பேசுகிறார். இது மக்களையும், ஜனநாயகத்தையும் அவமானப்படுத்துவது போல் ஆகும்.

குமாரசாமி, இந்த மண்ணின் மைந்தன் என்று பேசுகிறார். விவசாயிகளின் பிரச்சினைகள் தனக்கு நன்றாக தெரியும் என்று சொல்கிறார். ஆனால் போராட்டம் நடத்திய விவசாயிகளை கைது செய்து சிறையில் அடைக்கிறார்.

காங்கிரசுக்கு பாடம்

செயல்படாத நிலையில் உள்ள குமாரசாமியின் செயல்பாடுகளை கண்டு காங்கிரசார் வாய் திறக்காமல் இருப்பது எனக்கு ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. பெண் விவசாயி ஒருவரை குமாரசாமி தரக்குறைவாக பேசுகிறார். இதன் மூலம் அவர் பெண் இனத்தை அவமதித்துவிட்டார்.

இதற்கெல்லாம் குமாரசாமிக்கு ஆதரவு அளித்து வரும் காங்கிரஸ் தான் பொறுப்பு. வருகிற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கர்நாடக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story