மண்டியா அருகே கடன் தொல்லையால் பரிதாபம் விஷம் குடித்து விவசாயி தற்கொலை முதல்-மந்திரிக்கு உருக்கமான கடிதம்


மண்டியா அருகே கடன் தொல்லையால் பரிதாபம் விஷம் குடித்து விவசாயி தற்கொலை முதல்-மந்திரிக்கு உருக்கமான கடிதம்
x
தினத்தந்தி 24 Nov 2018 4:00 AM IST (Updated: 24 Nov 2018 3:31 AM IST)
t-max-icont-min-icon

மண்டியா அருகே கடன் தொல்லையால் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்துகொண்டார். அவர் முதல்- மந்திரிக்கு உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.

மண்டியா, 

மண்டியா அருகே கடன் தொல்லையால் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்துகொண்டார். அவர் முதல்- மந்திரிக்கு உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.

கடன் தொல்லை

கர்நாடகத்தில் விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய முதல்-மந்திரி குமாரசாமி நடவடிக்கை எடுத்து வருகிறார். இருப்பினும் சில வங்கிகள் கடனை திரும்ப செலுத்தும்படி விவசாயிகளை கட்டாயப்படுத்தி வருகின்றன. இந்த கடன் தொல்லையால் மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.

விவசாயிகள் யாரும் தற்கொலை செய்யும் முடிவை தேடிக்கொள்ளக்கூடாது, அரசு விவசாய கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக முதல்-மந்திரி குமாரசாமி கூறி வருகிறார். இருப்பினும் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில் மண்டியாவை சேர்ந்த ஒரு விவசாயி கடன் தொல்லையால் தற்கொலை செய்துள்ளார்.

அதுபற்றிய விவரம் வருமாறு:-

மண்டியா விவசாயி

மண்டியா மாவட்டம் கனகட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயகுமார் (வயது 43). விவசாயி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி, 2 மகன்கள் உள்ளனர். இவர் ரூ.3 லட்சம் கடன் வாங்கி பயிர் சாகுபடி செய்திருந்தார். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு மகசூல் கிடைக்கவில்லை. இதனால் அவர் கடனை திரும்ப கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் அவரிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதற்கிடையே ஜெயகுமார் தொண்டை புற்றுநோயால் அவதிப்பட்டார். இதற்காக சிகிச்சை எடுக்க ரூ.3 லட்சம் செலவாகும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு புறம் கடன் தொல்லை, மறுபுறம் நோய்க்கு சிகிச்சை பெற பணம் இல்லாமலும் அவதிப்பட்ட ஜெயகுமார் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார்.

விஷம் குடித்து தற்கொலை

அதன்படி நேற்று அதிகாலை தனது தோட்டத்திற்கு சென்ற ஜெயகுமார் பூச்சிகொல்லி மருந்து (விஷம்) குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி அறிந்ததும் அவரது குடும்பத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தற்கொலை செய்த ஜெயகுமாரின் உடலை பார்த்து கதறி அழுதனர். இது கல்நெஞ்சையும் கரைப்பதாக இருந்தது.

மேலும் சம்பவம் பற்றி தகவல் அறிந்து மண்டியா புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

முதல்-மந்திரிக்கு உருக்கமான கடிதம்

மேலும் தற்கொலை செய்வதற்கு முன்பு முதல்-மந்திரி குமாரசாமிக்கு ஜெயகுமார் உருக்கமான கடிதம் எழுதி வைத்திருந்தார். அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த நான் கடந்த 4 ஆண்டுகளாக தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தேன்.

இதனால் சரிவர விவசாயம் செய்ய முடியாமல் கடனை திரும்ப செலுத்த முடியாமல் சிரமப்பட்டேன். கடன் தொல்லையால் நான் இந்த முடிவை தேடிக்கொள்கிறேன். எனது குடும்பத்திற்கு முதல்-மந்திரி உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என கூறப்பட்டு இருந்தது.

போராட்டம்

இதற்கிடையே முதல்-மந்திரி குமாரசாமி நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மண்டியாவுக்கு வந்தார். இதை அறிந்த ஜெயகுமாரின் குடும்பத்தினரும், விவசாயிகளும் ஜெயகுமாரின் உடலை சாலையோரத்தில் வைத்து இழப்பீடு வழங்கக் கோரி போராட்டம் நடத்தினர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே தகவல் அறிந்த மந்திரி சி.எஸ்.புட்டராஜு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், அரசு சார்பில், தற்கொலை செய்த ஜெயகுமாரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும், மேலும் ஜெயகுமாரின் பிள்ளைகள் படிக்கவும் அரசு உதவும் என்றும் உறுதி அளித்தார். இதைதொடர்ந்து போராட்டத்தை அவர்கள் கைவிட்டனர்.

இதுதொடர்பாக மண்டியா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story