மக்காச்சோள பயிரில் படைபுழு தாக்குதல்: நிவாரணம் கேட்டு கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை - குறைதீர் கூட்டத்தில் பரபரப்பு


மக்காச்சோள பயிரில் படைபுழு தாக்குதல்: நிவாரணம் கேட்டு கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை - குறைதீர் கூட்டத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 23 Nov 2018 9:45 PM GMT (Updated: 23 Nov 2018 11:04 PM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் படைபுழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிருக்கு நிவாரணம் வழங்கக்கோரி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர், 


பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். அப்போது கூட்டத்தில் பங்கேற்பதற்காக விவசாயிகள் படைபுழு தாக்கிய மக்காச்சோள பயிர்களை கையில் ஏந்தியவாறு கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்தப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

அப்போது விவசாயிகள் படைபுழுவால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளத்திற்கு பிரதம மந்திரி வேளாண் காப்பீடு திட்டத்தில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரமும், வறட்சியால் காய்ந்து போன கரும்புக்கு காப்பீடு திட்டத்தில் பயிர் காப்பீடு செய்தவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரமும் தமிழக அரசு வழங்க வேண்டும். மேலும் காப்பீடு செய்யாத விவசாயிகள் அனைவருக்கும் நிவாரணம் வழங்கிட தமிழக அரசை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு தர்ணாவில் ஈடுபட்டனர்.

மேலும் மக்காச்சோளத்தில் தாக்கிய படைபுழுவை கட்டுபடுத்த ஆய்வு செய்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதில் அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், கரும்பு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர். இதையடுத்து படைபுழு தாக்கிய மக்காச்சோள பயிரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு கையோடு விவசாயிகள் எடுத்து சென்று கலெக்டர் சாந்தாவிடம் காண்பித்து மனு ஒன்றை கொடுத்தனர். முன்னதாக தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ராஜா சிதம்பரம் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டம் தான் மக்காச்சோளம், பருத்தி, சின்ன வெங்காயம் அதிகம் விளையும் முதன்மை பகுதியாகும். ஆனால் கடந்த ஆண்டு விவசாயிகள் பருத்தி விளைவித்த போது களைக்கொல்லி தாக்கியதால் விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால் பருத்தியை இந்த ஆண்டு விவசாயிகள் குறைவாக சாகுபடி செய்துள்ளனர்.

நிவாரணம்

மேலும் மக்காச்சோள பயிரில் படைபுழு தாக்கியதால் ஏக்கருக்கு ஒரு மூட்டை மக்காச்சோளம் கூட கிடைக்காத சூழ்நிலை உள்ளது. மேலும் சின்ன வெங்காயத்தில் நோய் தாக்குதல் உள்ளது. வறட்சியால் காய்ந்த கரும்புக்கும் அரசு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவில்லை. எனவே அரசு மக்காச்சோளம், பருத்தி, சின்ன வெங்காயத்திற்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரமும், கரும்புக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரமும் நிவாரணமாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்றார்.

குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் சாந்தாவிடம் ராஜா சிதம்பரம் கொடுத்த மனுவில், விவசாய நிலம் சம்பந்தமான வில்லங்க சான்று சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிந்த ஆவணத்தை மட்டும் பத்திரப்பதிவின் போது ஏற்றுக்கொள்ளப் படுகிறது. ஆனால் இ-சேவை மையங்களில் பெறப்பட்ட வில்லங்க சான்று பத்திரப்பதிவின் போது ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. இ-சேவை மையங்களில் பெறப்படும் விவசாய நிலம் சம்பந்தமான வில்லங்க சான்றினை பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஏற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் செல்லத்துரை பேசுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாய நிலங்களுக்கு மின்சாரம் வழங்கப்படும் மின்மாற்றிகள் அடிக்கடி பழுதாகிறது. அதனை பழுது செய்ய கால தாமதம் ஆவதால் நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். எனவே பெரம்பலூர் நான்கு ரோட்டில் தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தில் மின்மாற்றிகளை பழுது செய்ய தொழில் பிரிவு தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். சின்னமுட்லுவில் நீர்த்தேக்கம் விரைவாக அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ரமேஷ் பேசுகையில், கஜா புயலால் பெரம்பலூர் மாவட்டம் பாதிக்கப்படவில்லையென்றாலும், காற்றில் வாழை, மக்காச்சோள பயிர்கள் சாய்ந்து சேதமடைந்தன. அதனை கணக்கிட்டு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். தற்போது கால்நடைகளை கோமாரி நோய் தாக்கி வருகிறது. சிறப்பு மருத்துவ முகாமினை ஏற்படுத்தி நோயை பரவவிடமால் தடுக்க வேண்டும் என்றார்.

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணை செயலாளர் ராஜேந்திரன் பேசுகையில், போதிய அளவு மழை பெய்யாததால் பெரம்பலூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும், எறையூர் அரசு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத்தொகை ரூ.31.93 கோடியை உடனடியாக வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Next Story