வாணியம்பாடியில் பாலம் கட்டும் பணி முடங்கியதால் மூடப்பட்ட ரெயில்வே கேட் திறக்கப்படுகிறது சிக்னல்கள் சீரமைக்கும் பணி தீவிரம்


வாணியம்பாடியில் பாலம் கட்டும் பணி முடங்கியதால் மூடப்பட்ட ரெயில்வே கேட் திறக்கப்படுகிறது சிக்னல்கள் சீரமைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 25 Nov 2018 4:30 AM IST (Updated: 24 Nov 2018 10:07 PM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடியில் பாலம் கட்டுவதற்காக நியூ டவுன் ரெயில்வே கேட் மூடப்பட்டது. ஆனால் பாலம் கட்டும் பணி தொடங்கப்படாமல் ஒரு வருடத்திற்கு மேல் ஆகியதால் அந்த ரெயில்வே கேட் மீண்டும் திறக்கப்படுகிறது.

வாணியம்பாடி,

வாணியம்பாடி ரெயில் நிலையம் அருகே நியூ டவுன் பகுதியில் ரெயில்வே கேட் உள்ளது. புறவழிச்சாலையிலிருந்து வாணியம்பாடி நகருக்குள் இந்த வழியாகத்தான் பஸ்கள் வர வேண்டும். காட்பாடி, ஜோலார்பேட்டை இடையே போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து இடங்களிலும் ரெயில்வே மேம்பாலம், சுரங்கப்பாதை என அமைக்கப்பட்ட நிலையில் இங்கு மட்டும் ரெயில்வே கேட் இருந்தது.

சக்கரத்தை சுழற்றி திறந்து மூடும் வகையில் இந்த கேட் அமைந்திருந்தது. இந்த வழியாக 24 மணி நேரமும் ரெயில் போக்குவரத்து இருந்ததால் அடிக்கடி ரெயில்வே கேட் மூடப்பட்டு திறக்கப்பட்டது. எனவே இங்கு மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு டெண்டர் விடப்பட்டது. அதன்பின் ரூ.16 கோடியில் பாலம் கட்டுவதற்கான டெண்டர் இறுதி செய்யப்பட்டு பணி உத்தரவு வழங்கப்பட்டது. 1½ வருடத்தில் கட்டுமான பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டது.

பணிகள் தொடங்குவதற்கு வசதியாக இந்த ரெயில்வே கேட் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி மூடப்பட்டது. அப்போது பணிகள் தொடங்குவதற்கு அடையாளமாக 20 அடியில் குழி தோண்டப்பட்டது. ஆனால் அதன்பிறகு எந்த பணிகளும் நடைபெறவில்லை.

ரெயில்வே கேட் மூடப்பட்டதால் வாணியம்பாடி நகரிலிருந்து வேலூர், திருப்பத்தூர், ஆலங்காயம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. அந்த பாதை கூடுதல் தூரமாக இருந்ததால் பஸ் கட்டணமும் உயர்த்தப்பட்டது. மேலும் வாகனங்களில் செல்ல கூடுதல் நேரமும் ஆனது.

ஆனால் நியூடவுனில் மூடப்பட்ட ரெயில்வே கேட் மீது பாலம் அமைப்பதற்கான எந்த பணிகளும் நடைபெறவில்லை. இதனால் பல்வேறு தரப்பினர் கடும் அவதிக்குள்ளாகினர். இது தொடர்பாக ரெயில்வே நிர்வாகத்துக்கு புகார்கள் சென்றன. பாலம் கட்டும் பணியை தொடங்க வேண்டும், இல்லாவிட்டால் நியூடவுன் ரெயில்வே கேட்டை திறக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொகுதி எம்.எல்.ஏ.வான அமைச்சர் நிலோபர்கபில் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் பாலம் கட்டும் பணி நடைபெறாதது குறித்து கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம் பாலம் கட்டும் பணி நடைபெறாவிட்டால் டிசம்பர் 29-ந் தேதிக்குள் மீண்டும் ரெயில்வே கேட்டை திறக்க உத்தரவிட்டது. அதனை ரெயில்வே நிர்வாகம் ஏற்றுக்கொண்டது.

இந்த நிலையில் ரெயில்வே கேட்டை திறப்பதற்காக அங்குள்ள சிக்னல்கள் சீரமைக்கும் பணி மற்றும் ரெயில்வே கேட்டை மூடி திறப்பதற்காக சக்கர சுழற்சியை சரி பார்க்கும் பணி மற்றும் ரெயில்வே கேட்டை வாகனங்கள் கடக்கும் இடத்தில் பாதை சமன்படுத்தும் பணி ஆகியவை முழுவீச்சில் நடக்கிறது. இந்த பணிகளில் ரெயில்வே பொறியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். பணிகள் முடிந்தபின் வருகிற 29-ந் தேதி மீண்டும் இந்த ரெயில்வே கேட் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாலம் கட்டும்பணிக்காக ரெயில்வே கேட் மூடப்பட்ட நிலையில் எந்த பணியும் நடைபெறாமல் கோர்ட்டு உத்தரவின்பேரில் மீண்டும் ரெயில்வே கேட் பழைய நிலையிலேயே திறக்கப்படுகிறது. எந்த பணியும் நடைபெறாமல் மூடப்பட்ட கேட் மீண்டும் திறக்கப்படுவது ரெயில்வே துறையில் இதுதான் முதலாவதாக இருக்கும் என வாணியம்பாடியை சேர்ந்த பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Next Story