வேலூர் கிரீன் சர்க்கிளில் டாக்டரிடம் செல்போன் பறிப்பு மொபட்டில் வந்த 3 வாலிபர்கள் கைவரிசை
வேலூர் கிரீன் சர்க்கிளில் டாக்டரிடம் செல்போனை பறித்து விட்டு, மொபட்டில் தப்பி சென்ற 3 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வேலூர்,
வேலூர் சங்கரன்பாளையத்தை சேர்ந்தவர் வாசு (வயது 50), ஓமியோபதி டாக்டர். இவர் நேற்று முன்தினம் இரவு கிரீன் சர்க்கிள் பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் முன்பாக நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு மொபட்டில் 3 வாலிபர்கள் வந்தனர்.
மொபட்டின் நடுவில் இருந்த வாலிபர் திடீரென வாசுவின் மார்பு மீது கையால் ஓங்கி அடித்தான். இதனை எதிர்பார்க்காத வாசு சுதாரிப்பதற்குள் மொபட்டின் பின்னால் இருந்த வாலிபர் வாசு கையில் வைத்திருந்த செல்போனை பறித்தான்.
இதனால் அதிர்ச்சி அடைந்த வாசு ‘திருடன்’... ‘திருடன்’... என சத்தம் போட்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்து அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் 3 பேரும் மொபட்டில் அங்கிருந்து புதிய பஸ் நிலையம் வழியாக தப்பி சென்றனர்.
இது குறித்து வாசு வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பகுதியில் உள்ள ஓட்டலில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து செல்போனை பறித்து விட்டு தப்பிச் சென்ற 3 வாலிபர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதேபோன்று கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கிரீன் சர்க்கிளில் பஸ்சுக்காக நின்று கொண்டிருந்த இளம்பெண்ணின் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் பறித்து சென்றது குறிப்பிடத்தக்கது. இப்பகுதியில் வழிப்பறி சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருவதால் இங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். மேலும் இரவு நேரத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story