திருவண்ணாமலையில் மகாதீபத்தையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்


திருவண்ணாமலையில் மகாதீபத்தையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்
x
தினத்தந்தி 25 Nov 2018 4:30 AM IST (Updated: 24 Nov 2018 10:22 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் மகாதீபத்தையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்றனர். கோவிலிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை, 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத்திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 2 ஆயிரத்து 668 அடி உயரம் உள்ள மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. மகாதீபத்தை காணவும், கிரிவலம் செல்லவும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்திருந்தனர். அவர்கள் கிரிவலம் சென்று தீபத்தை வணங்கினர்.

நேற்று முன்தினம் மாலையில் மகாதீபம் நிகழ்ச்சி முடிந்த பிறகு கொடியிறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து இரவு 12 மணியளவில் பஞ்சமூர்த்திகளான விநாயகர் மர மூஷிக வாகனத்திலும், வள்ளி தெய்வானையுடன் முருகன் மயில் வாகனத்திலும், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் தங்க ரிஷப வாகனத்திலும், பராசக்தி அம்மன் மர ரிஷப வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் மர நந்தி வாகனத்திலும் வீதிஉலா வந்து அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதனிடையே மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி முடிந்ததும் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மேலும் கோவிலில் காலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். சுமார் 5 மணி நேரத்திற்கு மேல் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். நேற்றும் கோவிலை சுற்றி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story