கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிரந்தர வீடு கட்டி கொடுக்க வேண்டும் ரஜினிகாந்த் சகோதரர் சத்தியநாராயணா வேண்டுகோள்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிரந்தர வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்று குமாரபாளையத்தில் ரஜினிகாந்த் சகோதரர் சத்தியநாராயணா வேண்டுகோள் விடுத்தார்.
குமாரபாளையம்,
நாமக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி குமார பாளையம் கோட்டைமேடு வேலப்பா அரங்கத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் அரங்கண்ணல் தலைமை தாங்கினார். கர்நாடக மாநில ரஜினிகாந்த் ரசிகர் மன்ற தலைவர் வெங்கடேஷ், செயலாளர் சந்திரகாந்த், நாமக்கல் மாவட்ட துணைச்செயலாளர் ஹரிஹரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குமாரபாளையம் நகர செயலாளர் முருகேசன் வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில், நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயணா கலந்துகொண்டு நிவாரண பொருட்கள் கொண்டு செல்லும் லாரியை கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் கடலோர மாவட்டங்களான நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் வசிக்கின்ற மக்கள் புயல் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். அது மிகுந்த கவலையை அளிக்கிறது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரஜினிகாந்த் செல்வார். ஆனால் அவர் எப்போது செல்வார் என்று கூறமுடியாது. நிச்சயம் செல்வார். ரஜினி மன்றத்தின் சார்பில் மாவட்டந்தோறும் நிவாரண பொருட்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிரந்தரமாக வீடு கட்டி கொடுக்க வேண்டும். இதேபோல் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அதை மாநில அரசு சிறப்பாக செய்து கொண்டிருக்கிறது. இன்னும் துரிதமாக செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முடிவில் ரஜினி மக்கள் மன்ற குமாரபாளையம் நகர துணை செயலாளர் லாரன்ஸ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story