ஆழியாற்றில் கலக்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்; அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை


ஆழியாற்றில் கலக்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்; அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 25 Nov 2018 4:15 AM IST (Updated: 25 Nov 2018 12:12 AM IST)
t-max-icont-min-icon

ஆழியாற்றில் கலக்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகின்றது. ஆழியாற்றில் திறக்கப்படும் தண்ணீரை சுத்திகரித்து பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது. குடிநீர் வடிகால் வாரியம் மூலம் 295 வழியோர கிராமங்களுக்கு தனி குடிநீர் திட்டம், சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி தனி குடிநீர் திட்டம், ஜமீன்ஊத்துக்குளி குடிநீர் திட்டம், கோவை குறிச்சி– குனியமுத்தூர் திட்டம் உள்பட 8 குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த குடிநீர் திட்டங்களுக்கு தினமும் 600 லட்சம் லிட்டர் குடிநீர் ஆழியாற்றில் இருந்து எடுக்கப்படுகின்றது. இதை தவிர பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளுக்கு தினமும் 90 லட்சத்து 80 ஆயிரம் லிட்டர் குடிநீர் எடுத்து, பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகின்றது. இந்த நிலையில் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும் குடிநீர் சுவை இல்லாமல், தண்ணீர் கலங்கலாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் தங்கமுத்து என்பவர் கூறியதாவது:–

பொள்ளாச்சி நகராட்சி மற்றும் சுற்று வட்டார கிராமங்களுக்கு ஆழியாற்றில் எடுக்கப்படும் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு வினியோகம் செய்யப்படுகின்றது. இதற்காக அம்பராம்பாளையத்தில் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகின்றது. இதற்கிடையில் பாலாறு, உப்பாறு ஆகிய ஆறுகள் கலந்து ஆழியாறாக அம்பராம்பாளையம் வழியாக கேரளாவுக்கு செல்கிறது. தற்போது ஆற்றில் ஆலைக்கழிவுகள், வீட்டுக் கழிவுகள் கலந்து தண்ணீர் மாசடைந்த நிலையில் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வருகிறது. அங்கிருந்து பொள்ளாச்சி நகரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது.

கடந்த ஓராண்டுகளாக குடிநீர் குடிக்கவோ, சமையல் செய்யவோ ஏற்றதாக இல்லை. இருப்பினும் பொதுமக்கள் வேறு வழியில்லாமல் பயன்படுத்தி வருகின்றனர். ஆனைமலை ஆற்றில் கலக்கும் கழிவுகள், பாலாறு, உப்பாற்றின் கரைகளில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள் மற்றும் தென்னை நார் கழிவுகள், சோப்பு கழிவுகள் கலப்பதால் ஆழியாற்று நீர் மாசுபடுகிறது. இந்த தண்ணீர் நீர்உந்து நிலையங்களில் சுத்தம் செய்யப்படுகிறதா? என்பது சந்தேகமாக உள்ளது. தண்ணீரின் நிறம் செம்பழுப்பு நிறத்தில் உள்ளது. மேலும் தண்ணீர் தெளிந்த நிலையில் இல்லாமல் கலங்கலாக உள்ள குடிநீரை தான் பொதுமக்கள் குடிக்க வேண்டியது உள்ளது.

வசதியானவர்கள் விலைக்கு வாங்கி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வாங்கி குடித்து வருகின்றனர். ஆனால் கிராமங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்களால் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்த முடியவில்லை. மாசுப்பட்ட குடிநீரை குடிப்பதால் சளி, மஞ்சள் காமாலை மற்றும் வைரஸ் காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவி வருகின்றது. டாக்டர்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்க அறிவுறுத்துகிறார்கள். தண்ணீரை எவ்வளவு தான் கொதிக்க வைத்து, வடிகட்டினாலும் ஓரளவுக்கு தான் தெளிவாகிறது. கொதிக்க வைத்து ஆறவைத்தால் பாத்திரங்களில் சுண்ணாம்பு படிவது மட்டுமல்லாமல் குடிநீர் உப்புகரிக்கின்றது.

உண்மையிலேயே சுத்திகரிப்பு நிலையத்தில் ஆற்றுநீர் சுத்தப்படுத்தப்பட்டு, குடிநீருக்கு அனுப்பப்படுகிறதா? என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். சுத்திகரிப்பு நிலையங்கள் ஒப்பந்தத்திற்கு விடப்பட்டு உள்ளதால், பெயரளவில் தான் சுத்தம் செய்யப்படுவதாகவும், அங்கு உள்ள ஆய்வுக்கூடம் செயல்படாமல் இருப்பதாக தெரிகிறது. எனவே ஆழியாற்றின் உண்மை நிலையை கண்டறிய குடிநீரை பரிசோதனை செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு சுத்தமான, சுகாதாரமான குடிநீரை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:–

பாலாற்றில் உப்பு படிவங்கள் அதிகமாக உள்ளது. இதனால் ஆழியாற்றுடன் கலந்து வரும் போது குடிநீர் சுவை இல்லாமல் இருக்க கூடும். எனவே பாலாறு மற்றும் ஆழியாற்று குடிநீரை எடுத்து பரிசோதனை செய்யப்படும். பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் வினியோகம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் கழிவுகள் கலப்பதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. ஆற்றங்கரையோரங்களில் கழிவுகளை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story