கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.16½ லட்சம் நிவாரண பொருட்கள்; கலெக்டர் தகவல்


கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.16½ லட்சம் நிவாரண பொருட்கள்; கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 25 Nov 2018 4:15 AM IST (Updated: 25 Nov 2018 12:20 AM IST)
t-max-icont-min-icon

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.16½ லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறினார்.

ஊட்டி,

கஜா புயல் தாக்கியதில் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. லட்சக்கணக்கான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன. நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. புயல் காரணமாக குடிசை மற்றும் ஓட்டு வீடுகள் இடிந்து விழுந்தன. இதனால் பலர் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள்.

இதனைதொடர்ந்து தமிழக அரசு நிவாரண பணிகளை முடுக்கி உள்ளது. அரசு தரப்பில் மட்டுமல்லாது பல்வேறு தரப்பினரும் உதவிகளை செய்து வருகிறார்கள். இருப்பினும் தொலைதூரத்தில் உள்ள கிராமங்களுக்கு சரிவர நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், திருவாரூர் உள்பட 10 மாவட்ட மக்களுக்கு உதவிகளை புரிய ‘உதவும் உதகை’ என்ற பெயரில் நிவாரண பொருட்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது. கூடலூர், பந்தலூர் தாலுகா, மசினகுடி ஒருங்கிணைந்த வணிகர்கள் சங்கம் சார்பில், ஆயிரத்து 560 கிலோ அரிசி, 315 கிலோ சர்க்கரை, 200 கிலோ பருப்பு, பிஸ்கட், நாப்கின், சோப்பு, பால் பவுடர், மெழுகுவர்த்தி, சேமியா, தட்டு, தேங்காய் எண்ணெய், தண்ணீர் பாட்டில்கள், தரை விரிப்புகள் உள்பட ரூ.8 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை மாவட்ட கலெக்டரிடம் நேற்று வழங்கப்பட்டது.

இந்த நிவாரண பொருட்கள் லாரி மூலம் திருவாரூர் மாவட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அனுப்பி வைத்தார். நீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஒப்பந்ததாரர்கள் சார்பில் ரூ.2 லட்சத்துக்கான வரைவோலை, ஊட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் சார்பில் ரூ.1½ லட்சத்துக்கான வரைவோலை கஜா புயல் பாதிப்புக்கு முதல்–அமைச்சர் பொதுநிவாரண நிதி என்ற பெயரில் கலெக்டரிடம் வழங்கினர். இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:–

நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூரில் இருந்து திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு தலா ஒரு லாரியில் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு உள்ளது. இதன் மதிப்பு ரூ.8½ லட்சம் ஆகும். நீலகிரி பொதுமக்கள், பல்வேறு அமைப்புகள் நிவாரண பொருட்கள் மற்றும் நிவாரண நிதியை மாவட்ட கலெக்டர் மூலம் கஜா புயல் பாதித்த டெல்டா மாவட்டங்களுக்கு அனுப்பலாம். நீலகிரியில் கடந்த 3 நாட்களில் ரூ.16½ லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் லாரி மற்றும் வாகனங்களில் திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

============


Next Story