ஊட்டியில் மழைநீர் கால்வாய்க்குள் கார் பாய்ந்தது; டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்


ஊட்டியில் மழைநீர் கால்வாய்க்குள் கார் பாய்ந்தது; டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
x
தினத்தந்தி 25 Nov 2018 3:45 AM IST (Updated: 25 Nov 2018 12:20 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் மழைநீர் கால்வாய்க்குள் கார் பாய்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து கூட்ஷெட் சாலை வழியாக ஹில்பங்க் வரை மாநில நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக தான் ஊட்டியில் இருந்து கூடலூர், மைசூரு, பெங்களூரு, வயநாடு, கோழிக்கோடு உள்பட பல்வேறு இடங்களுக்கு அரசு பஸ்கள் சென்று வருகின்றன. இதுதவிர கேரளா மற்றும் கர்நாடகா மாநில பஸ்களும் வந்து செல்கின்றன. இதனால் அந்த சாலையில் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.

ஊட்டி ரெயில்வே பூங்கா மற்றும் மத்திய அரசு தங்கும் விடுதி முன்பும் மாநில நெடுஞ்சாலையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் இருபுறங்களில் இருந்து வரும் வாகனங்கள் ஒன்றுக்கொன்று வழி கொடுக்க முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற சம்பவத்தால் மதுரையில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா வந்த சிறுமி மீது வாகனம் மோதியதில், அவள் பரிதாபமாக உயிரிழந்தாள்.

இந்த நிலையில் நேற்று ஹில்பங்கில் இருந்து கார் ஒன்று பஸ் நிலையம் நோக்கி வந்தது. முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்ற போது, அந்த கார் நிலை தடுமாறி எதிர்பாராதவிதமாக மழைநீர் கால்வாய்க்குள் பாய்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினார். காரின் முன்பகுதி சேதமடைந்தது. அதனை தொடர்ந்து கிரேன் மூலம் கால்வாயில் இருந்து கார் மீட்கப்பட்டது.

இந்த மழைநீர் கால்வாய் திறந்த நிலையில் காணப்படுகிறது. ஒரே சமயத்தில் 2 வாகனங்கள் சென்றால், சாலையோரத்தில் நடந்து செல்லும் பொதுமக்கள் ஒதுங்கி நிற்க முடியாது. அதன் காரணமாக சிலர் கால்வாயில் விழுந்து காயம் அடைந்து உள்ளனர். மேலும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் நீடிக்கிறது. புதிதாக வரும் டிரைவர்கள் ஒருவிதமான பயத்துடன் வாகனங்களை இயக்குகிறார்கள். எனவே, விபத்து ஏற்படுவதை தடுக்க மழைநீர் கால்வாயின் மேல்பகுதியில் கான்கிரீட் போட்டு மூடுவதோடு, பொதுமக்கள் நடைபாதையாக பயன்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Related Tags :
Next Story