மயக்க ஊசி செலுத்தி நடக்க முடியாமல் அவதி அடைந்த காட்டெருமைக்கு சிகிச்சை
குன்னூர் அருகே நடக்க முடியாமல் அவதி அடைந்த காட்டெருமைக்கு வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளித்தனர்.
குன்னூர்,
குன்னூர் அருகே தூதூர்மட்டம், கிரேக்மோர், கெரடாலீஸ், மகாலிங்கம் காலனி, அணிமன் உள்ளிட்ட 10–க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை ஒட்டியுள்ள தேயிலை தோட்டங்கள் மற்றும் வனப்பகுதிகளில் காட்டெருமை, கரடி, காட்டுப்பன்றி, சிறுத்தைப்புலி, கடமான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இந்த வனவிலங்குகள் உணவு மற்றும் குடிநீர் தேடி குடியிருப்புகள், விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருவது தொடர் கதையாக உள்ளது.
இந்நிலையில் கடந்த 1 மாதத்திற்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டெருமை ஒன்று குடியிருப்பு பகுதி மற்றும் விளை நிலங்களில் சுற்றி திரிந்தது. எதிர்பாராத விதமாக இந்த காட்டெருமையின் காலில் இரும்பு கம்பி சிக்கியது. இதனால் காலில் வீக்கம் ஏற்பட்டு நடக்க முடியாமல் அவதி அடைந்து வந்தது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் குந்தா வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில் வனத்துறையினர் மற்றும் கால்நடை டாக்டர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
ஆனால் அந்த காட்டெருமை அதன் அருகே யாரையும் செல்ல விடவில்லை. இதனால் கால்நடை டாக்டர்கள் 8 மணி நேரத்திற்கு மேலாக அதற்கு சிகிச்சை அளிக்க முடியாமல் திணறினர். அதன் பின்னர் மயக்க ஊசி செலுத்தி காட்டெருமைக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது.
இதனைதொடர்ந்து வனத்துறையினர் காட்டெருமைக்கு மயக்க ஊசி செலுத்தினர். இதில், அந்த காட்டெருமை மயங்கி விழுந்தது. அதன்பின்னர் கால்நடை டாக்டர்கள் அந்த காட்டெருமைக்கு சிகிச்சை அளித்தனர். சிறிது நேரம் கழித்து வனத்துறையினர் அந்த காட்டெருமையை வனப்பகுதிக்குள் பத்திரமாக விட்டனர்.