போலீசார் கெடுபிடி காரணமாக சாலையில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் தலைகுந்தா மக்கள் பாதிப்பு


போலீசார் கெடுபிடி காரணமாக சாலையில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் தலைகுந்தா மக்கள் பாதிப்பு
x
தினத்தந்தி 25 Nov 2018 3:45 AM IST (Updated: 25 Nov 2018 12:20 AM IST)
t-max-icont-min-icon

போலீசார் கெடுபிடி காரணமாக சாலையில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் தலைகுந்தா மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் அவர்கள் சோதனைச்சாவடியை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் மலை மாவட்டமாக உள்ளது. ஊட்டியில் இருந்து தலைகுந்தா வழியாக மசினகுடிக்கு கல்லட்டி மலைப்பாதை செல்கிறது. இந்த மலைப்பாதையில் செங்குத்தான 36 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை 2–வது கியரில் மட்டுமே இயக்க வேண்டும் என்று ஆங்காங்கே சாலையோரங்களில் தகவல் பலகைகள் வைக்கப்பட்டு இருக்கிறது. கடந்த மாதம் சுற்றுலா பயணிகள் சென்ற கார் 34–வது கொண்டை ஊசி வளைவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கப்பல் கேப்டன் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில வாகனங்கள் கல்லட்டி மலைப்பாதையில் இயக்க முழுமையாக தடை விதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் மட்டும் அந்த மலைப்பாதையில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்க அனுமதிக்கப்பட்டது. மேலும் வெளி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டு நீலகிரி மாவட்டத்துக்கு பதிவு மற்றும் பெயர் மாற்றம் செய்த வாகனங்களை கல்லட்டி மலைப்பாதை வழியாக இயக்க காவல்துறையிடம் அனுமதிக்கான ஸ்டிக்கர் பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தலைகுந்தா பகுதியை சுற்றி காந்திநகர், அழகர்மலை, சோலாடா போன்ற இடங்களில் 3 ஆயிரத்து 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதி பொதுமக்கள் சிலர் லாரி, சுற்றுலா வாகனம், தனியார் வாகனங்களை சொந்தமாக வைத்து உள்ளனர். இந்த வாகனங்களை அவர்களது வீட்டு பகுதியில் இரவு நேரங்களில் நிறுத்த அனுமதிக்கப்பட்டு இருந்தது. அவசர மருத்துவ சிகிச்சை, பள்ளி, கல்லூரி மாணவர்களை அழைத்து வருதல் போன்றவற்றுக்கு போலீசாரின் அனுமதி பெற்று வாகனங்களை இயக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

கல்லட்டி மலைப்பாதையில் வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில வாகனங்கள் செல்வதை தடுக்கவும், உள்ளூர் வாகனங்கள் செல்ல அனுமதிக்கும் வகையிலும் தலைகுந்தாவில் போலீஸ் வாகன சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. சோதனைச்சாவடியில் இரவு நேரங்களில் புதிதாக போலீசார் பணியமர்த்தப்பட்டனர். இந்த போலீசார் தலைகுந்தா பகுதியில் வசிக்கும் மக்களின் வாகனங்களை இரவு 10 மணிக்கு மேல் செல்ல அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தி விடுகின்றனர். இதனால் பொதுமக்கள் சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டு, கடுங்குளிர் மற்றும் கொட்டும் மழையில் நடந்தே வீடுகளுக்கு செல்கிறார்கள். மேலும் மறுநாள் காலையில் வந்து தான் வாகனங்களை எடுக்க வேண்டிய நிலை காணப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், நேற்று காலையில் போலீஸ் வாகன சோதனைச்சாவடியை திடீரென முற்றுகையிட முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த புதுமந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சரசுமணி மற்றும் போலீசார் சோதனைச்சாவடிக்கு வந்தனர். அங்கே நின்று கொண்டிருந்த தலைகுந்தா பகுதி மக்களிடம், உங்களது பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளலாம் என்றனர். அதற்கு அவர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதனால் முற்றுகையிடாமல் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்து தலைகுந்தா பகுதியை சேர்ந்த கார்த்திக் கூறியதாவது:–

போலீஸ் வாகன சோதனைச்சாவடி மேல்பகுதியில் உள்ள மக்கள் தங்களது வீடுகளில் வாகனங்களை நிறுத்த அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது புயல், மழை போன்ற காரணங்களால் வெளிமாவட்டங்களுக்கு சென்று திரும்பும் போது, இரவு 10 மணிக்கு மேல் ஆகிறது. சோதனைச்சாவடி மூடப்பட்டு விடுவதால், வீடுகள் அருகே வாகனங்களை நிறுத்த விடாமல் போலீசார் கெடுபிடி செய்கிறார்கள். விலை உயர்ந்த வாகனங்களை சாலையில் நிறுத்தினால், அதில் உள்ள பொருட்கள் திருட்டு போகும் அபாயம் உள்ளது.

இதனால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளோம். தலைகுந்தாவில் அமைக்கப்பட்ட சோதனைச்சாவடியை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும். கல்லட்டியில் சோதனைச்சாவடி அமைத்து, மசினகுடி பகுதிக்கு செல்லும் வாகனங்களை தடுக்க வேண்டும். இதுகுறித்து ஏற்கனவே நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, கலெக்டருக்கு மனு கொடுத்து இருக்கிறோம். அந்த மனு மீது அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து பொதுமக்களை பாதிக்கும் வகையில் போலீசார் கெடுபிடி செய்தால் போராட்டத்தில் ஈடுபட நேரிடும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story