ஈரோட்டில் இரிடியம் புரோக்கர்கள் 3 பேர் கைது
ஈரோட்டில் இரிடியம் புரோக்கர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு,
ஈரோடு முத்தம்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 46). இவர் டிராக்டர் வைத்து தொழில் நடத்தி வருகிறார். இவருக்கு ஈரோடு அருகே உள்ள வெள்ளோடு பகுதியை சேர்ந்த தவப்பாண்டி (29) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நண்பர்களாக இவர்கள் 2 பேரும் பழகி வந்தனர்.
இந்தநிலையில் ஆறுமுகத்திடம் தவப்பாண்டி, தனது நண்பர்கள் 2 பேர் தொழில் விஷயமாக ஈரோட்டிற்கு வருவதாகவும், அவர்களை 2 நாட்கள் வீட்டில் தங்க வைக்குமாறும் கேட்டுக்கொண்டார். அதற்கு ஆறுமுகமும் ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து தவப்பாண்டி கூறியதன்படி கடலூர் மாவட்டம் ஆக்காலூர் இடைகர்வாய் பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு (28), திருவண்ணாமலை மாவட்டம் காஞ்சி சுண்ணாம்பு கால்வாய் பகுதியை சேர்ந்த முகமதுஷரீப் (28) ஆகியோர் ஆறுமுகத்தின் வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்றனர். அவர்களுடன் தவப்பாண்டியனும் சென்றிருந்தார்.
அங்கு 4 பேரும் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது திருநாவுக்கரசு, முகமது ஷரீப் ஆகியோர் ஆறுமுகத்திடம், தாங்கள் மதிப்பு மிக்க இரிடியம் விற்பனை செய்து வருவதாகவும், தங்களுக்கு தெரிந்த பணக்காரர்கள் யாராவது இருந்தால் கூறும்படியும் கேட்டுக்கொண்டனர். மேலும், ஆட்களை தெரிவித்தால் பணம் கொடுப்பதாகவும் தெரிவித்தனர். இதனால் அவர்கள் மீது ஆறுமுகத்துக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, இரிடியம் விற்பது தொடர்பாக எனக்கு விருப்பம் கிடையாது என்றும், பணக்காரர்களின் விவரங்களை தெரிவிக்க முடியாது என்றும் ஆறுமுகம் மறுத்துவிட்டார். மேலும் அவர்களை வீட்டில் இருந்து வெளியேறும்படியும் ஆறுமுகம் கூறினார்.
இதனால் தவப்பாண்டி, திருநாவுக்கரசு, முகமது ஷரீப் ஆகிய 3 பேரும் ஆறுமுகத்தை தகாத வார்த்தையில் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி ஆறுமுகம் ஈரோடு தாலுகா போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தவப்பாண்டி, திருநாவுக்கரசு, முகமதுஷரீப் ஆகியோரை கைது செய்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், கைதானவர்கள் பணக்காரர்களின் விவரங்களை தெரிந்துகொண்டு அவர்களிடம் மூளைச்சலவை செய்து இரிடியம் விற்கும் முயற்சியில் ஈடுபட்டு பணம் பறித்து வந்தது தெரியவந்தது. அவர்கள் யாருக்கெல்லாம் இரிடியம் விற்பனை செய்து உள்ளனர்? அவர்களுடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் யார்? எங்கிருந்து இரிடியம் வாங்குகிறார்கள்? என்று போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.