ராஜபாளையம்-செங்கோட்டை 4 வழிச்சாலை பணிக்காக அதிகாரிகள் நட்ட அளவு கற்களை பிடுங்கி வீசிய விவசாயிகள்
ராஜபாளையம்-செங்கோட்டை 4 வழிச்சாலை பணிக்காக அதிகாரிகள் நட்ட அளவு கற்களை விவசாயிகள் பிடுங்கி வீசினர்.
தென்காசி,
ராஜபாளையம்-செங்கோட்டை 4 வழிச்சாலை பணிக்காக அதிகாரிகள் நட்ட அளவு கற்களை விவசாயிகள் பிடுங்கி வீசினர்.
கற்கள் நடும் பணி
ராஜபாளையத்தில் இருந்து செங்கோட்டை வரை பயண நேரத்தை குறைப்பதற்காக 4 வழிச்சாலை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக நெல்லை மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்த அளவிடும் பணி தொடங்கி உள்ளது. தென்காசி அருகே உள்ள வடகரை, அச்சன்புதூர் பகுதிகளில் அளவு கற்கள் நடும் பணி நடைபெற்றது. இதுகுறித்து விவசாயிகளுக்கு முன்கூட்டி அறிவிக்கப்படவில்லை. எந்த பகுதிகள் கையகப்படுத்தப்படும் என்று கருத்துகளும் கேட்கப்படவில்லை. திடீரென அதிகாரிகள் காவல் துறையினருடன் அளவு கற்களை நட்டுள்ளனர்.
தென்காசி அருகே உள்ள அச்சன்புதூரில் அதே ஊரை சேர்ந்த விவசாயி மீரான் கனி என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் அதிகாரிகள் அளவு கற்களை நட்டுள்ளனர். இதுகுறித்து அவருக்கு எவ்வித தகவலும் கொடுக்கவில்லை. எனவே அவர் அந்த கற்களை பிடுங்கி வீசிவிட்டார். இதே போல் சில விவசாயிகளும் அளவு கற்களை பிடுங்கி எறிந்தனர்.
நிவாரணம்
இதுகுறித்து மீரான்கனி கூறுகையில், “ராஜபாளையம்-செங்கோட்டை 4 வழிச்சாலை அமைப்பதில் எனக்கு எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது. எனக்கும், எனது சகோதரர்களுக்கும் 48 ஏக்கர் தோப்பு உள்ளது. இதில் தென்னை மற்றும் நெல்லி வைத்துள்ளோம். எங்களது இடத்தில் உள்ள 2 கிணறுகள் மூலம் பயிர் செய்து வருகிறோம். சாலை பணிக்காக இந்த கிணறுகளை கையகப்படுத்தும் வகையில் கற்கள் நட்டுள்ளனர். இதுகுறித்து என்னிடம் அதிகாரிகள் எவ்வித அனுமதியும் கேட்கவில்லை. என்னிடம் கேட்டிருந்தால் எனது இடத்திலேயே சிறிது தூரம் தள்ளி இடம் கொடுத்திருப்பேன். இப்போதும் நான் இடம் தர தயாராக உள்னேள். ஆனால் என்னிடம் கேட்காமல் அளவு கற்களை நட்டுள்ளனர். நான் அதை பிடுங்கி வீசிவிட்டேன்“ என்றார்.
வடகரையை சேர்ந்த விவசாயி ஜாகிர் உசேன் கூறுகையில், வடகரையில் ஏராளான ஏக்கர் பரப்பில் தென்னை மரங்கள், வாழை, நெல்லை, மா, நெல் போன்றவை பயிரிடப்பட்டு உள்ளன. விவசாயிகளிடம் எவ்வித கருத்தும் கேட்கப்படாமல் காவல்துறையை வைத்துக்கொண்டு அதிகாரிகள் அளவு கற்களை நட்டுள்ளார்கள். விவசாயிகளிடம் உரிய முறையில் ஆலோசனை நடத்தி நிவாரணம் வழங்கி நிலத்தை கையகப்படுத்த வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story