20 சட்டசபை தொகுதிகளுக்கு உடனே இடைத்தேர்தல் நடத்த வேண்டும் காதர் முகைதீன் பேட்டி
தமிழகத்தில் 20 சட்டசபை தொகுதிகளுக்கு உடனே இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் முகைதீன் கூறினார்.
தென்காசி,
தமிழகத்தில் 20 சட்டசபை தொகுதிகளுக்கு உடனே இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் முகைதீன் கூறினார்.
நூல் வெளியீடு
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நெல்லை மேற்கு மாவட்ட கவுரவ தலைவர் எம்.எஸ்.துராப்ஷா எழுதிய ‘தென்னிந்திய இஷாஅத் சபை வரலாற்று நூல்‘ வெளியீட்டு விழா தென்காசியில் நடந்தது. சபை தலைவர் கோதர் மைதீன் தலைமை தாங்கினார். கவிஞர் அப்துர் ரகுமான், நன்னகரம் முகம்மது அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் முகைதீன், முகம்மது அபுபக்கர் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்து கொண்டு நூலை வெளியிட்டனர்.
பேட்டி
பின்னர் காதர் முகைதீன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில மாநாடு அடுத்த ஆண்டு பிப்ரவரி 16-ந் தேதி மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் நடக்கிறது. இதில் கட்சியின் தேசிய நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். மேலும் காங்கிரஸ் தேசிய தலைவர் ராகுல் காந்தி, மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ஆகியோரை அழைக்க முயற்சி செய்து வருகிறோம். மாநாட்டின் நிறைவுரையாற்ற தி.மு.க தலைவர் ஸ்டாலினை கேட்டுக் கொண்டுள்ளோம். மாநாட்டில் மத்திய, மாநில அரசுகளின் தவறான கொள்கைகள், பா.ஜ.க. ஆட்சியின் ஜனநாயக மீறல்கள் குறித்து விவாதிக்கிறோம்.
தமிழகத்தில் கஜா புயலால் 4 மாவட்டங்களில் மிகுந்த சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த புயல் வருவதற்கு முன்பு முன்னெச்சரிக்கையாக அரசு எடுத்த நடவடிக்கைகள் நன்றாக இருந்தது. ஆனால் புயலுக்கு பிறகு நிவாரணம் வழங்குவதில் அரசு மெத்தனம் காட்டுகிறது என பொதுமக்கள் புகார் கூறுகிறார்கள். அந்த பகுதிகளில் செல்லும் அமைச்சர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். மத்திய அரசிடம், முதல்-அமைச்சர் நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடி கேட்டு, முதற்கட்டமாக ரூ.1,500 கோடி வழங்க கூறியுள்ளார். ஆனால் அதையும் மத்திய அரசு வழங்கவில்லை.
தேர்தல் நடத்த வேண்டும்
மத்திய அரசிடம் ஜெயலலிதா, கருணாநிதி போல வலிமையாக வற்புறுத்த இந்த அரசு தயாராக இல்லை. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவில்லை. பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளாட்சி நிர்வாகிகள் இருந்திருந்தால் நிவாரண பணிகளில் தொய்வு இருந்திருக்காது. உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்துகிறார்கள். காலியாக உள்ள 20 சட்டசபை தொகுதிகளுக்கு உடனடியாக இடைத்தேர்தல் நடத்த வேண்டும். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே இடைத்தேர்தல் நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக நடந்த மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் மாநில பொருளாளர் ஷாஜகான், முதன்மை துணை தலைவர்கள் அப்துர் ரகுமான், ஹம்சா, மாநில செயலாளர்கள் நெல்லை மஜித், காயல் மகபூப், வி.டி.எஸ்.ஆர்.முகம்மது இஸ்மாயில், பி.எஸ்.இஸ்மாயில், இப்ராகிம், நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் செய்யது சுலைமான், இளைஞர் அணி துணை செயலாளர் முகம்மது அலி உள்படபலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story