ரெயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குவதை தடுக்கக்கோரி தண்டவாளத்தில் அமர்ந்து கிராம மக்கள் போராட்டம் விருத்தாசலத்தில் பரபரப்பு
விருத்தாசலம் செம்பளாக்குறிச்சி ரெயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குவதை தடுக்கக்கோரி தண்டவாளத்தில் அமர்ந்து கிராம மக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அருகே உள்ளது செம்பளாக்குறிச்சி கிராமம். இந்த கிராமத்திற்கு விருத்தாசலம்-உளுந்தூர்பேட்டை சாலையில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடந்து தான் செல்ல வேண்டும். இதை தவிர்த்து பொதுமக்கள் ரெயில் தண்டவாளத்தை கடப்பதற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது.
இந்த சுரங்கப்பாதை வழியாக செம்பளாக்குறிச்சி, சித்தேரிக்குப்பம், கவணை, பண்டாரக்குப்பம், மாத்தூர், இருசாளக்குப்பம் உள்ளிட்ட 7 கிராம மக்கள் சென்று வந்தனர். ஆனால் இந்த சுரங்கப் பாதையில் சரியான வடிகால் வசதி ஏற்படுத்தி தரவில்லை. இதன்காரணமாக ஒவ்வொரு மழையின் போதும் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு ஏற் படுகிறது. இதனால் அந்த பகுதி கிராம மக்கள் கடும் அவதியடைந்து வந்தனர்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். மேலும் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போன்ற போராட்டமும் நடத்தினர். ஆனால் இது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் விருத்தாசலம் பகுதியில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்தது. இதன்காரணமாக செம்பளாக்குறிச்சி ரெயில்வே சுரங்கப்பாதையில் 5 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியது. இதனால் அப்பகுதி கிராம மக்கள் சுரங்கப்பாதையை பயன்படுத்த முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீரை உடனே அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கடந்த 21-ந் தேதி சப்-கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் திருச்சி கோட்ட ரெயில்வே முதன்மை பொறியாளர் கார்த்திகேயன் தலைமையிலான அதிகாரிகள் சுரங்கப்பாதையில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதற்கிடையே அதிகாரிகள் தங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தாததை கண்டித்தும், சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குவதை நிரந்தரமாக தடுக்கக்கோரியும் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று கிராம மக்கள் அறிவித்திருந்தனர். அதன்படி, நேற்று காலை 9 மணியளவில் சித்தேரிக்குப்பம், கவணை, பண்டாரக்குப்பம் உள்பட 7 கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் செம்பளாக்குறிச்சி ரெயில்வே சுரங்கப்பாதை அருகே திரண்டனர். பின்பு அவர்கள் அங்குள்ள தண்டவாளத்தில் அமர்ந்து தங்கள் போராட்டத்தை தொடங்கினர். அப்போது அவர்கள் ரெயில்வே நிர்வாகத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், ரெயில்வே இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, திருச்சி ரெயில்வே இன்ஸ்பெக்டர் ஜாக்லின் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் ரெயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது கிராம மக்கள் கூறும்போது, சுரங்கப்பாதையில் தேங்கும் தண்ணீரை நிரந்தரமாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்க வேண்டும். அப்போது தான் நாங்கள் கலைந்து செல்வோம் என்று கூறினர்.
இதற்கிடையே கிராம மக்கள் போராட்டம் நடத்தும் தகவல் அறிந்ததும் திருச்சி கோட்ட முதன்மை பொறியாளர் கார்த்திகேயனும் விரைந்து வந்து, போராட்டக்காரர்களுடன் நீண்டநேரம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள தண்ணீரை மின்மோட்டார் மூலம் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொதுமக்கள் தண்டவாளப்பாதையில் தற்காலிகமாக நடந்து செல்ல வசதிகள் செய்து தரப்படும் என்று உறுதியளித்தார்.
இதை ஏற்றுக் கொண்டு கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். ஆனால் சுரங்கப்பாதையில் உள்ள தண்ணீரை முழுமையாக அகற்றாமல் ரெயில்வே துறையினர் பாதியிலேயே விட்டு சென்றதாக தெரிகிறது. இதை பார்த்து ஆத்திரமடைந்த கிராம மக்கள் மீண்டும் போராட்டம் நடத்தி முயன்றனர். அப்போது அங்கு வந்த தாசில்தார் கவியரசு மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, இப்பிரச்சினை குறித்து வருகிற 28-ந்தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி சுமுக முடிவு எடுக்கலாம் என்று கூறினர். இதை ஏற்ற கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த போராட்டத்தின் காரணமாக மதுரையில் இருந்து சென்னைக்கு செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் விருத்தாசலம் ரெயில் நிலையத்திற்கு காலை 10.50 மணிக்கு வந்து, சுமார் ½ மணிநேரம் தாமதமாக 11.20 மணிக்கு சென்னை நோக்கி புறப்பட்டது. இதே போல் மதுரையில் இருந்து விழுப்புரம் செல்லும் பயணிகள் ரெயில் விருத்தாசலம் ரெயில் நிலையத்திற்கு காலை 9.50 மணிக்கு வந்து, 11.05 மணிக்கு விழுப்புரத்துக்கு புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் அவதியடைந்தனர்.
Related Tags :
Next Story