கள்ளக்காதல் விவகாரத்தில் தொழிலாளியை கொன்ற ரியல் எஸ்டேட் அதிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


கள்ளக்காதல் விவகாரத்தில் தொழிலாளியை கொன்ற ரியல் எஸ்டேட் அதிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 25 Nov 2018 4:30 AM IST (Updated: 25 Nov 2018 12:49 AM IST)
t-max-icont-min-icon

மூலனூரில் கள்ளக்காதல் விவகாரத்தில் தொழிலாளியை கொன்ற வழக்கில் கைதான ரியல் எஸ்டேட் அதிபர் ஹரிதாஸ் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

மூலனூர்,

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் காமராஜர்புரத்தை சேர்ந்தவர் ராமு (வயது 46). இரும்பு பட்டறை கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கவிதா(42). தாராபுரத்தை சேர்ந்தவர் ஹரிதாஸ்(41). ரியல் எஸ்டேட் அதிபர். கவிதாவுக்கும், ஹரிதாசுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மலர்ந்தது.

இது பற்றி அறிந்த ராமு இருவரையும் கண்டித்தார். இதனால் தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் ராமுவை தீர்த்து கட்ட இருவரும் முடிவு செய்தனர். அதன்படி கடந்த மாதம் மூலனூர் அருகே நல்லசெல்லிபாளையத்தில் உள்ள சோளக்காட்டுக்கு ராமுவை வரவழைத்தனர். அங்கு வந்த ராமுவை கவிதாவும், ஹரிதாசும் கல்லால் அடித்து கொலை செய்தனர். இந்த வழக்கில் மூலனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதலர்கள் கவிதா, ஹரிதாஸை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் கைதான ஹரிதாஸ் மீது கடந்த 2010–ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும், தாராபுரம் போலீஸ் நிலையத்தில் அடிதடி வழக்கில் ஏற்கனவே கைதாகி இருப்பதாகவும் தெரிய வந்தது. தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் ஹரிதாசை மூலனூர் இன்ஸ்பெக்டர் வனிதாமணி, தாராபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு வேலுமணி ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழிக்கு பரிந்துரை செய்தனர். அவர் ஹரிதாசை குண்டர் சட்டத்தில் அடைக்க திருப்பூர் கலெக்டருக்கு பரிந்துரை அனுப்பினார்.

இதையடுத்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி, குண்டர் சட்டத்தில் ஹரிதாசை கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். இதற்கான உத்தரவு கோவை சிறையில் இருக்கும் ஹரிதாசிடம் வழங்கப்பட்டது.


Next Story