பெண்ணாடம் அருகே தொடர் மழை வெள்ளாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு; தரைப்பாலம் உடைப்பு போக்குவரத்து துண்டிப்பால் கிராம மக்கள் அவதி
பெண்ணாடம் அருகே வெள்ளாற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் அங்கிருந்த தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
பெண்ணாடம்,
பெண்ணாடம் அருகே உள்ள சவுந்திரசோழபுரம் கிராமத்துக்கும், அரியலூர் மாவட்டம் கோட்டைக்காடு கிராமத்துக்கும் இடையே வெள்ளாறு ஓடுகிறது. இந்த இருகிராமங்களையும் இணைக்கும் வகையில் வெள்ளாற்றின் குறுக்கே செம்மண்ணால் தரைப்பாலம் அமைக்கப்பட்டு இருந்தது.
அரியலூர் மாவட்டத்தைச்சேர்ந்த கோட்டைக்காடு, ஆலத்தியூர், முள்ளுக்குறிச்சி, ஆதனக்குறிச்சி, புதுப்பாளையம், தெத்தேரி, முதுகுளம் உள்ளிட்ட கிராம மக்கள் கடலூர் மாவட்டத்துக்கு வருவதற்கு இந்த பாலத்தை பயன்படுத்தி வந்தனர். அதே போல் பெண்ணாடம் பகுதியில் உள்ள சவுந்திரசோழபுரம், மாளிகை கோட்டம், நந்திமங்கலம், வடகரை, செம்பேரி உள்ளிட்ட கிராம மக்கள் அரியலூர் மாவட்டத்துக்கு செல்வதற்கும் இந்த பாலத்தை பயன்படுத்தி வந்தனர். இதனால் சுமார் 50-க்கும் அதிகமான கிராம மக்களின் போக்குவரத்துக்கு இத்தரைப்பாலம் பயன்பட்டு வந்தது.
கடலூர்-அரியலூர் ஆகிய இரு மாவட்டங்களை இணைக்கும் இத்தரைப்பாலம் மழை காலங்களில் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படுவதும், மீண்டும் செம்மண் போட்டு தரைப்பாலம் அமைத்து பயன்படுத்துவதும் வழக்கமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக கடலூர் மாவட்டம் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த மழையினால் உப்பு ஓடை மற்றும் ஆனைவாரி ஓடையில் இருந்து மழை நீர் வெள்ளாற்றில் பாய்ந்தோடியது. இந்த வெள்ளத்தில் தரைப்பாலம் நேற்று அடித்து செல்லப்பட்டது.
தரைப்பாலம் இல்லாமல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் கடலூர், அரியலூர் ஆகிய இரண்டு மாவட்டங்களைச்சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்கு வெளியூர் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே வெள்ளாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
இதற்கிடையே பெண்ணாடம், அரியலூர் பகுதியில் பெய்த தொடர் மழையால் வெள்ளாற்றில் தண்ணீர் வரத் தொடங்கியது. இதன் காரணமாக பெண்ணாடம் பெலாந்துறை அணைக்கட்டிற்கு நீர்வரத்து நேற்று முதல் தொடங்கியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ள னர். தொடர்ந்து மழை பெய்தால் அணைக்கட்டு அதன் முழு கொள்ளளவான 6 அடிக்கு நிரம்பும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
Related Tags :
Next Story