மண்டபம் பகுதியில் விடிய விடிய கனமழை குடிசை வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
மண்டபம் பகுதியில் விடிய விடிய பெய்த கனமழையால் குடிசை வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து மண்டபம் யூனியன் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தண்ணீரை அப்புறப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பனைக்குளம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலோர பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய பெய்த கனமழையால் மண்டபம் யூனியனுக்கு உட்பட்ட பிரப்பன்வலசை, சாத்தக்கோன்வலசை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைவெள்ளம் குடியிருப்புகளை சூழ்ந்தது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
இதையடுத்து சாத்தக்கோன்வலசை முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கற்பகவள்ளி சந்திரன், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் பி.கே.சந்திரன், ஊராட்சி செயலாளர் புல்லாணி குமார், பிரப்பன்வலசை ஊராட்சி செயலர் பன்னீர்செல்வம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ்கண்ணன் ஆகியோர் இதுகுறித்து மண்டபம் யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜாவுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து அவர் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை நேரில் பார்வையிட்டு தண்ணீரை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டார். இதையடுத்து ஜே.சி.பி. எந்திரம் மூலம் கால்வாய் தோண்டப்பட்டு சாத்தக்கோன்வலசை, பிள்ளைமடம் வழியாக வேதாளை ஆற்றுப்பகுதிக்கு மழைநீர் கடத்தப்பட்டது. மேலும் இந்த மழை வெள்ளம் சாலை வலசை, பிரப்பன்வலசை, சாத்தக்கோன்வலசை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் செல்லாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதேபோல மண்டபம் பேரூராட்சி பகுதியில் உள்ள பல்வேறு குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. ஏராளமான வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள். அதனை தொடர்ந்து மண்டபம் பேரூராட்சி செயல் அலுவலர் மஞ்சுநாத் மேற்பார்வையில் இளநிலை உதவியாளர் முனியசாமி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மண்டபம் முகாமில் உள்ள ஹெலிகாப்டர் தளம் முழுவதும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. மண்டபம் யூனியன் நிர்வாகம் சார்பிலும், பேரூராட்சி நிர்வாகம் சார்பிலும் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.