வேலூர் மாவட்டத்தில் ரூ.11¼ கோடியில் கட்டிடப்பணிகள் கலெக்டர் ராமன் ஆய்வு
வேலூர் மாவட்டத்தில் ரூ.11¼ கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டிடப் பணிகளை கலெக்டர் ராமன் ஆய்வு செய்தார்.
வாலாஜா,
வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.5 கோடி மதிப்பில் வெளிப்புற நோயாளிகளுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய 2 மாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதனை வேலூர் மாவட்ட கலெக்டர் ராமன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் பொதுப்பணித்துறை அலுவலர்களிடம், வருகிற பிப்ரவரி மாதத்துக்குள் கட்டிடப்பணியை முடிக்கும் படி உத்தர விட்டார். அதற்கு அதிகாரிகள், 75 சதவீதம் கட்டிடப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளது, மீதமுள்ள பணிகள் குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்கப்படும், என்றனர்.
இதைத்தொடர்ந்து சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சேர்காடு பகுதியில் போக்குவரத்துத் துறையின் சோதனைச் சாவடி ரூ.16 லட்சத்து 71 ஆயிரம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளதையும், காட்பாடி தாலுகா அலுவலக பின்புறத்தில், வேலைக்குச் செல்லும் பெண்களுக்காக ரூ.1 கோடியே 1 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ள தங்கும் விடுதியையும் பார்வையிட்டார்.
அதைத்தொடர்ந்து மேல்மொணவூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் ஒருங்கிணைந்த தொழிலாளர் நல வாரிய அலுவலக கட்டிடம் ரூ.4 கோடியே 25 லட்சம் மதிப்பில் கட்டி முடியும் நிலையில் உள்ளதையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்தக் கட்டிடப்பணி 95 சதவீதம் நிறைவடைந்துள்ளது. வெளியில் இயங்கி வரும் தொழிலாளர் துறையின் அனைத்து அலுவலகங்களும் இந்தக் கட்டிடத்துக்குள் இயங்கும் விதமாக கட்டப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து வேலூர் சத்துவாச்சாரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.94 லட்சத்து 21 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் போக்குவரத்துத் துணை ஆணையர் அலுவலக கட்டிடப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் முடிவில் அனைத்துக் கட்டிடப் பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட கலெக்டர் ராமன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செந்தில்குமார் (மருத்துவக் கட்டிடங்கள்), ராமமூர்த்தி (கட்டிடம், பராமரிப்பு) மற்றும் மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் யாஸ்மின், உதவி செயற்பொறியாளர்கள் தேவன், பழனி, திரிபுரசுந்தரி, உதவிபொறியாளர் அண்ணாதுரை, இளநிலை பொறியாளர்கள் ராஜாமணி, ஜெயசந்திரன் மற்றும் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story