மெரினா கடற்கரை நுரையை மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு அச்சப்படும் அளவில் இல்லை என தகவல்


மெரினா கடற்கரை நுரையை மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு அச்சப்படும் அளவில் இல்லை என தகவல்
x
தினத்தந்தி 25 Nov 2018 4:30 AM IST (Updated: 25 Nov 2018 1:35 AM IST)
t-max-icont-min-icon

மெரினா கடற்கரையில் ஒதுங்கும் நுரை குறித்து ஆய்வு செய்யப்பட்டதில், அதனால் ஆபத்து ஏதுவும் இல்லை என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்து உள்ளது.

சென்னை,

சென்னை, மெரினா கடற்கரையில் 23-ந்தேதி முதல் அலையில் இருந்து நுரை வெளியே தள்ளப்பட்டு, கடற்கரை முழுவதும் பரவி கிடக்கிறது. இதனால் அங்கு செல்வோர் அச்சப்பட்டு கடற்கரை அலையில் கால்களை நனைக்காமல் ஒதுங்கி நின்று கடலை பார்வையிட்டு செல்கின்றனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மெரினா கடற்கரைக்கு சென்று ஆய்வுப்பணியில் ஈடுபட்டது.

இதுபற்றி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியதாவது:- மெரினா கடற்கரையில் அலையில் அதிகளவு நுரை வருவதாகவும், கடற்கரையில் நிற்பதற்கு பயமாக இருப்பதாகவும் பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்தன. அதனடிப்படையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் உள்ள அதிகாரிகள் அடங்கிய குழு அங்கு சென்று பார்வையிட்டது.

பட்டினப்பாக்கம் அருகில் உள்ள சீனிவாசபுரம் கடற்கரையில் இருந்து நுரை மாதிரி எடுக்கப்பட்டது. அதனை சோதனை செய்து பார்த்த போது அபாயகரமான நுரை இல்லை என்று தெரியவந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அச்சப்பட தேவையில்லை.

இதுபோன்ற நுரை வருவதற்கு காரணம், கூவம் மற்றும் அடையாறு ஆறுகளில் இருந்து கடலில் கலக்கும் கழிவு நீர், ஆர்ப்பரிக்கும் அலைகளின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாததால், கடலுக்கு உள்ளே செல்லாமல் கரைக்கு அருகிலேயே அலைகளில் சுழன்று கொண்டு கிடந்தது. இந்த கழிவு நீருடன் தற்போது பெய்த மழை நீரும் அதிகளவு கலந்தது. இதில் இருந்து ஒரு விதமான நுரை வெளியேறி வருகிறது.

இவை அலையின் வேகத்தில் கரைக்கு அடித்து வரப்பட்டு கரையில் தள்ளப்படுகிறது. இதனால் வேதியியல் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இல்லை. இவை ஒரு சில நாட்கள் இருக்கும். பின்னர் சரியாகி விடும். இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

இதுகுறித்து சீனிவாசபுரம் மீனவர்கள் கூறும் போது, ‘கடல் நீரில் ஆக்சிஜன் அளவு குறையும் போது கடலில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களால் அவ்வப்போது இதுபோன்று நுரை வெளிப்படுவது வழக்கம். எங்களுக்கு இது புதிதல்ல. பொதுமக்கள்தான் இந்த நுரையை பார்த்து அச்சப்படுகின்றனர்’ என்றனர்.

Next Story