நாடு தழுவிய போராட்டம்: அரசு ஊழியர்களுக்கு தலைமை செயலாளர் எச்சரிக்கை
நாடு தழுவிய போராட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில் புதுவை அரசு ஊழியர்களுக்கு தலைமை செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரி,
புதிய பென்ஷன் திட்டத்தை எதிர்த்து நாளை நாடு முழுவதும் போராட்டம் நடத்த அரசு ஊழியர்கள் திட்டமிட்டுள்ளனர். புதுவை மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக அரசு ஊழியர்கள் விடுமுறை எடுத்து இந்த போராட்டத்தில் பங்கு கொள்ள முடிவு செய்துள்ளனர்.
இதில் மாநில கோரிக்கைகளை முன்வைத்து கூட்டுறவு சங்கங்களும் போராட்டம் நடத்த தயாராகி வருகிறது. இதனால் அரசு பணிகள் முழுமையாக முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அனைத்து அரசு அரசு துறைகளுக்கும் புதுவை அரசின் தலைமை செயலாளர் அஸ்வனி குமார் உத்தரவின் பேரில் நிர்வாக சீர்திருத்த துறை அவசர சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:–
அரசு ஊழியர்கள் வருகிற 26–ந் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்த திட்டமிட்டு இருப்பதாக அறிகிறோம். இதனை சட்டப்படி ஏற்க முடியாது. எனவே அன்றைய தினம் அவசர காலமின்றி யாரும் விடுமுறை எடுக்கக்கூடாது. அன்றைய தினம் மதியம் 12 மணிக்குள் எத்தனை ஊழியர்கள் பணிக்கு வந்துள்ளனர்? எத்தனை ஊழியர்கள் பணிக்கு வரவில்லை என்ற விவரத்தையும் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.