காரைக்கால் பட்டமேற்படிப்பு மையத்துக்கு கருணாநிதி பெயர் சூட்ட அரசாணை வெளியீடு; தி.மு.க. பாராட்டு


காரைக்கால் பட்டமேற்படிப்பு மையத்துக்கு கருணாநிதி பெயர் சூட்ட அரசாணை வெளியீடு; தி.மு.க. பாராட்டு
x
தினத்தந்தி 25 Nov 2018 4:15 AM IST (Updated: 25 Nov 2018 1:38 AM IST)
t-max-icont-min-icon

காரைக்கால் பட்ட மேற்படிப்பு மையத்துக்கு கருணாநிதி பெயர் சூட்டுவது குறித்து அரசாணை வெளியிட்டதற்கு தி.மு.க. பாராட்டு தெரிவித்துள்ளது.

புதுச்சேரி,

தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவு தமிழ் சமுதாயத்துக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். இதை கருத்தில் கொண்டு அவருடைய தியாகத்தை நினைவுகூரும் விதத்திலும் புதுவை மாநில மக்கள் மீது அவர் கொண்டிருந்த பற்றினை போற்றும் வகையிலும் புதுச்சேரி தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி அரசு கருணாநிதி பெயரில் புதுவை பல்கலைக்கழகத்தில் இருக்கை உருவாக்குவது, நகரப்பகுதியில் பிரதான சாலைக்கும், காரைக்கால் பட்டமேற்படிப்பு மையத்துக்கும் கருணாநிதி பெயரை சூட்டுவது என்றும் அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டு முதல்–அமைச்சரால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதற்காக புதுவை அரசுக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக புதுவை பல்கலைக்கழகத்தில் கருணாநிதி பெயரில் இருக்கை உருவாக்கப்பட்டு அதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இதனிடையே தற்போது காரைக்கால் பட்டமேற்படிப்பு மையத்திற்கு கருணாநிதியின் பெயரை சூட்டுவதற்கான அரசாணையை புதுவை அரசு வெளியிட்டுள்ளது.

புதுவை கூட்டணி அரசு கருணாநிதியின் புகழுக்கு அணிசேர்க்கும் வகையில் அறிவித்த திட்டங்களை இவ்வளவு விரைவாக செயல்படுத்தி வருவது தி.மு.க.வினர் மத்தியில் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்தினரிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படிப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டு செயல்படுத்திய அரசிற்கும், முதல்–அமைச்சருக்கும் புதுவை மாநில தி.மு.க. சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story