பேரையூர் அருகே பெண்ணை உயிரோடு கொளுத்திய தொழிலாளியும் உடல் கருகி படுகாயம்


பேரையூர் அருகே பெண்ணை உயிரோடு கொளுத்திய தொழிலாளியும் உடல் கருகி படுகாயம்
x
தினத்தந்தி 25 Nov 2018 4:00 AM IST (Updated: 25 Nov 2018 1:53 AM IST)
t-max-icont-min-icon

பேரையூர் அருகே பெண் மீது மண்எண்ணெயை ஊற்றி உயிரோடு கொளுத்திய கணவரும் அந்த தீயில் கருகி படுகாயமடைந்தார்.

பேரையூர்,

பேரையூர் அருகே உள்ள வலையபட்டி கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோ(வயது 29). இவருடைய மனைவி பஞ்சவர்ணம்(27). இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். இளங்கோ விறகு வெட்டும் தொழில் செய்து வருகிறார். பஞ்சவர்ணத்திடம் அவருடைய மாமியார் பேச்சியம்மாள் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு இருந்தது.

இந்தநிலையில் சம்பவத்தன்று இளங்கோவும், பேச்சியம்மாளும் சேர்ந்து பஞ்சவர்ணத்திடம் வரதட்சணை கேட்டுள்ளனர். இதில் கணவன்–மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த இளங்கோ, மனைவி பஞ்சவர்ணம் மீது மண்எண்ணெயை ஊற்றி தீவைத்துள்ளார். உடலில் தீப்பற்றிய நிலையில் பஞ்சவர்ணம் உடனே அருகில் நின்றிருந்த இளங்கோவை கெட்டியாக பிடித்துக் கொண்டார். இதனால் அவர் மீதும் தீப்பிடித்தது.

தீயில் கருகிய தம்பதியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து அவர்களை சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்த அவர்கள் மேல் சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக பஞ்சவர்ணம் கொடுத்த புகாரின்பேரில் இளங்கோ, அவரது தாயார் பேச்சியம்மாள் ஆகியோர் மீது நாகையாபுரம் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story