கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி கவர்னர் வாழ்த்து


கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி கவர்னர் வாழ்த்து
x
தினத்தந்தி 25 Nov 2018 3:45 AM IST (Updated: 25 Nov 2018 1:53 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கவர்னர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்தினார்.

மதுரை,

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் 27–வது பட்டமளிப்பு விழா மதுரை கீழக்குயில்குடியில் உள்ள பல்கலைக்கழகத்தின் ஆய்வு மையத்தில் நேற்று நடந்தது.

விழாவுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் வள்ளி வரவேற்றுப் பேசினார். பல்கலைக்கழகங்களின் வேந்தரும், தமிழக கவர்னருமான பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்ற 221 மாணவிகளுக்கு கவர்னர் பட்டங்களை வழங்கினார். கல்வியில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு தங்கப்பதக்கங்களையும் அணிவித்து வாழ்த்தினார்.

அதனை தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலை, எம்.பில். ஆகிய பட்டப்படிப்புகளை முடித்த மாணவிகள் 9 ஆயிரத்து 925 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

விழாவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி விமலா, தமிழக உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் மங்கத்ராம் சர்மா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

பட்டமளிப்பு விழாவுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் படிக்கும் மாணவிகளின் பெற்றோர் வந்திருந்தனர். ஆனால், விழா நடக்கும் இடம் மிகவும் சிறியதாக இருந்ததால், பெற்றோர்களை விழா அரங்குக்குள் பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதிக்கவில்லை. அதற்கு பதிலாக, பெரிய எல்.சி.டி. திரை மூலம் பட்டமளிப்பு நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்கிடையே, தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிகழ்ச்சிகள் தெரியவில்லை. அதனை தொடர்ந்து பெற்றோர்களுக்கும், பல்கலைக்கழக அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்தநிலையில், ஒரு மாணவியின் பெற்றோரை பெண் போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், விழா அரங்குக்கு வெளியே கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து கவர்னரின் பாதுகாவலர்கள் பெற்றோர்களை சமாதானம் செய்தனர்.


Next Story