மண்டியா அருகே கோர விபத்து தனியார் பஸ், கால்வாய்க்குள் பாய்ந்தது பள்ளி மாணவர்கள் உள்பட 30 பேர் பலி


மண்டியா அருகே கோர விபத்து தனியார் பஸ், கால்வாய்க்குள் பாய்ந்தது பள்ளி மாணவர்கள் உள்பட 30 பேர் பலி
x
தினத்தந்தி 24 Nov 2018 11:30 PM GMT (Updated: 24 Nov 2018 8:56 PM GMT)

மண்டியா மாவட்டம் பாண்டவபுராவில் இருந்து நேற்று பகல் 12 மணி அளவில் மண்டியா நோக்கி ஒரு தனியார் பஸ் புறப்பட்டு சென்றது.

மைசூரு, 

மண்டியா மாவட்டம் பாண்டவபுராவில் இருந்து நேற்று பகல் 12 மணி அளவில் மண்டியா நோக்கி ஒரு தனியார் பஸ் புறப்பட்டு சென்றது.

தனியார் பஸ்

அந்த பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். சனிக்கிழமையான நேற்று பள்ளிக்கு அரை நாள் விடுமுறை விடப்பட்டது. இதனால் இந்த பஸ்சில் பள்ளி மாணவ-மாணவிகள் அதிகளவில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பயணித்தனர். மேலும் பெண்களும் பஸ்சில் சென்றனர்.

இந்த பஸ் பாண்டவபுரா தாலுகா கனகனமரடி கிராமத்தின் அருகே வந்து கொண்டிருந்தது. கனகனமரடி வழியாக கே.ஆர்.எஸ். (கிருஷ்ணராஜசாகர்) அணை பாசன கால்வாய் செல்கிறது. தற்போது பாசனத்திற்காக கே.ஆர்.எஸ். அணையில் இருந்து கால்வாயில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடியது.

கால்வாய்க்குள் பாய்ந்தது

இதனால் பஸ்சில் இருந்த பள்ளி மாணவ-மாணவிகள், பெண்கள் அய்யோ... அம்மா... என கூச்சலிட்டனர். ஆனால் கண் இமைக்கும் நேரத்தில் அந்த பஸ், சாலையோரம் ஓடும் 12 அடி ஆழ கால்வாய்க்குள் முழுமையாக பாய்ந்தது. கால்வாயில் அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் பஸ் நீருக்குள் மூழ்கியது. இதனால் பஸ்சுக்குள் சி்க்கியிருந்தவர்கள் காப்பாற்றும் படி அபயக் குரல் எழுப்பினர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அந்தப் பகுதி மக்கள் விரைந்து சென்று பஸ்சுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அத்துடன் தகவல் அறிந்ததும் பாண்டவபுரா போலீசார் மற்றும் 6 வாகனங்களில் தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள், பொதுமக்களுடன் சேர்ந்து மீட்பு பணிகளில் துரிதமாக ஈடுபட்டனர்.

30 பேர் பலி

பஸ்சுக்குள் சிக்கியவர்கள் நீரில் மூழ்கி பலியானது தெரியவந்தது. இதையடுத்து ஒவ்வொருவரின் உடல்களாக மீட்டு, கரையில் வரிசையாக வைக்கப்பட்டன. இந்த கோர விபத்தில் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. இதில் 16 பேர் பெண்கள் ஆவர். 6 பேர் பள்ளி மாணவ-மாணவிகள்.

பஸ் கால்வாய்க்குள் விழுந்து நீரில் மூழ்கியதும் அதில் பயணித்த சிலர் முண்டியடித்துக்கொண்டு ஜன்னல் வழியாக தப்ப முயன்றனர். ஆனால் அது முடியாமல் போனதால் உயிர்சேதம் அதிகமானதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே கால்வாயில் தண்ணீர் திறந்துவிடுவது உடனே நிறுத்தப்பட்டது. அதைதொடர்ந்து மீட்பு பணிகள் முழுவீச்சில் நடந்தது.

உறவினர்கள் கதறல்

விபத்து பற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடினர். அவர்கள் கால்வாயின் இருபுறமும் நின்று மீட்பு பணிகளை பார்த்தப்படி இருந்தனர். பலியானவர்களின் உடல்களை பார்த்து அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர். இந்த மரண ஓலம் அந்தப் பகுதி முழுவதும் எதிெராலித்தது. இதனால் விபத்து நடந்த பகுதி சோகமயமாக காட்சி அளித்தது.

இந்த கோர விபத்து பற்றி தகவல் அறிந்ததும் முதல்-மந்திரி குமாரசாமி சம்பவ இடத்தில் மீட்பு பணிகளை துரிதப்படுத்தும் படி மாநில சிறிய நீர்ப்பாசனத் துறை மந்திரி சி.எஸ்.புட்டராஜு, மாநில போக்குவரத்து துறை மந்திரி டி.சி.தம்மண்ணா, கலெக்டர் மஞ்சுஸ்ரீ ஆகியோருக்கு உத்தரவிட்டார்.

முந்திச் செல்ல முயன்றதால்...

அதன்படி அவர்களும், போலீஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளை முடுக்கிவிட்டனர். மேலும் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு மந்திரிகள் சி.எஸ்.புட்டராஜு, டி.சி.தம்மண்ணா ஆகியோர் ஆறுதல் கூறினர்.

இதற்கிடையே விபத்துக்குள்ளான பஸ்சை மீட்க சம்பவ இடத்திற்கு கிரேன்கள் வரவழைக்கப்பட்டன. கிேரன்கள் உதவியுடன் சுமார் 20 நிமிட போராட்டத்திற்கு பிறகு கால்வாய்க்குள் இருந்து பஸ் மீட்கப்பட்டது. மேலும் கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டு வேறு யாரும் இறந்துள்ளனரா? என தீயணைப்பு படையினரும், பொதுமக்களும் கால்வாய் முழுவதும் ேதடி பார்த்தனர்.

விபத்தில் பலியானவர்களின் பெயர், விவரங்கள் உடனடியாக தெரியவரவில்லை. இதுபற்றி பாண்டவபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், விபத்தில் சிக்கிய பஸ்சின் டிரைவர், முன்னால் சென்ற பஸ்சை முந்திச் செல்ல முயன்றுள்ளார். அப்போது பஸ் கால்வாய்க்குள் பாய்ந்து 30 பேர் பலியானதும் தெரியவந்தது.

குமாரசாமி நேரில் ஆறுதல்

இதற்கிடையே முதல்-மந்திரி குமாரசாமி அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு மண்டியாவுக்கு விரைந்தார். அவர் விபத்து நடந்த இடத்தில் வைக்கப்பட்டு இருந்த பலியானவர் களின் உடல்களை பார்வையிட்டார். மேலும் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் தெரிவித்தார்.

அதன் பின்னர் குமாரசாமி நிருபர்களிடம் கூறுகையில், இந்த விபத்து துரதிர்ஷ்டவசமானது. விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பலியானவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றார்.

ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

இந்த துயர சம்பவம் பற்றி அறிந்த ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி, கவர்னர் வஜூபாய்வாலா, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், முன்னாள் பிரதமர் தேவேகவுடா, பா.ஜனதா தலைவர் எடியூரப்பா உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Next Story