திருத்துறைப்பூண்டி அருகே சோகம்: நிவாரண முகாமில் தங்கியிருந்த 3 பேர் சாவு


திருத்துறைப்பூண்டி அருகே சோகம்: நிவாரண முகாமில் தங்கியிருந்த 3 பேர் சாவு
x
தினத்தந்தி 25 Nov 2018 3:45 AM IST (Updated: 25 Nov 2018 3:09 AM IST)
t-max-icont-min-icon

கரையை கடந்து சென்ற பிறகும் ‘கஜா’ புயல் உயிர்களை பலிவாங்கி வருகிறது. திருத்துறைப்பூண்டி அருகே நிவாரண முகாமில் தங்கியிருந்த 3 பேர் இறந்திருப்பது, சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருத்துறைப்பூண்டி,

தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களை ‘கஜா’ புயல் உருக்குலைத்து விட்டது. சம்பா பருவத்தையொட்டி விவசாய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்த விவசாயிகள் பலரை, நிவாரண முகாம்களில் புயல் முடக்கி வைத்துள்ளது. கரையை கடந்து சென்று 9 நாட்களாகி விட்ட பின்னரும் கஜா புயல் உயிர் பலி வாங்கி வருகிறது.

நேற்றுமுன்தினம் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே நிவாரண பொருட்களை வாங்க காத்திருந்த 4 பெண்கள் கார் மோதி இறந்தனர். இந்த நிலையில் திருத்துறைப்பூண்டி பகுதியில் புயல் நிவாரண முகாமில் தங்கியிருந்த 3 பேர் பரிதாபமாக இறந்தனர். இதுபற்றிய விவரம் வருமாறு:-

திருத்துறைப்பூண்டி அருகே கீழகொற்கை, மணலி ஆகிய கிராமங்களை புரட்டி போட்ட ‘கஜா’ புயலால் ஏராளமானவர்கள் வீடுகளை இழந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள புயல் நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர். இந்த கிராமங்களில் உள்ள புயல் நிவாரண முகாம்களில் கீழகொற்கையை சேர்ந்த வெள்ளச்சி(வயது 65), மணலி எம்.கே. நகரை சேர்ந்த நாகம்மாள்(68) ஆகியோரும் தங்கி இருந்தனர்.

முகாமில் கிடைத்த உணவை சாப்பிட்டு வந்த இவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் இவர்கள் 2 பேரும் நேற்று பரிதாபமாக இறந்தனர்.

குறும்பல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புயல் நிவாரண முகாமில் அதே பகுதியை சேர்ந்த வீரரவி(45) என்பவர் தங்கி இருந்தார். இவருடைய வீடு கஜா புயலால் சேதமடைந்தது. இதனால் வேதனையில் இருந்த வீரரவி நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவங்கள் குறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story