9 நாட்களாக மின்சாரமின்றி தவிப்பு: மணப்பாறை பகுதியில் 2 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல்


9 நாட்களாக மின்சாரமின்றி தவிப்பு: மணப்பாறை பகுதியில் 2 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 25 Nov 2018 4:49 AM IST (Updated: 25 Nov 2018 4:49 AM IST)
t-max-icont-min-icon

மணப்பாறை பகுதியில் 9 நாட்களாக மின்சாரமின்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர். நேற்று குடிநீர், மின்சாரம் வழங்க கோரி 2 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வையம்பட்டி,

மணப்பாறையை அடுத்த தொட்டியபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நவலூரணிப்பட்டியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கஜா புயல் பாதிப்பை தொடர்ந்து இந்த பகுதியில் கடந்த 9 நாட்களாக மின்சாரம் இல்லாததால் மக்கள் இருளில் தவிக்கின்றனர். மேலும் குடிநீர் இல்லாமலும் கடும் வேதனைக்கு ஆளாகினர். இது தொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து, தங்கள் பகுதிக்கு மின்சாரம், குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவிலை.

இதனால் ஆத்திரமடைந்த மக்கள் நேற்று காலை மணப்பாறை - கோவில்பட்டி சாலையில் தொட்டியபட்டி என்ற இடத்தில் மறியலில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் அந்த பகுதியில் மழை பெய்தது. இருப்பினும் பலரும் மழையில் நனைந்தபடியும், சிலர் குடையை பிடித்தபடியும் மறியலை தொடர்ந்தனர். இது பற்றி தகவல் அறிந்த வளநாடு போலீஸ் ஏட்டு கவிதா, நெடுஞ்சாலை ரோந்து வாகன சப்-இன்ஸ்பெக்டர் நல்லதம்பி மற்றம் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் பொதுமக்கள், தங்கள் பகுதி மட்டும் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும், பல்வேறு இடங்களில் மின்சாரம் வழங்கப்பட்டு, குடிநீர் வினியோகம் செய்யப்படும் நிலையில் நவலூரணிப்பட்டி காலனி பகுதியில் மட்டும் ஏதும் வழங்காமல் ஒருதலை பட்சமாக இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி, தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இருப்பினும் போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக மின் இணைப்புகள் சரி செய்யப்படுவதுடன் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். இதனால் மணப்பாறை - கோவில்பட்டி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல் மணப்பாறையை அடுத்த காவல்காரன்பட்டி பகுதியிலும் மின்சாரம் வழங்கப்படவில்லை, குடிநீரும் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறி அந்த பகுதி மக்கள் மணப்பாறை - துவரங்குறிச்சி சாலையில் காவல்காரன்பட்டியில் மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த புத்தாநத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

கஜா புயல் தாக்கியதில் மணப்பாறை பகுதியில் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் மின்கம்பங்கள் விழுந்ததால் கடந்த 9 நாட்களாக பல்வேறு இடங்களிலும் தொடர்ந்து மக்கள் குடிநீர் மற்றும் மின்வசதி கேட்டு மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே மின்சாரம் துண்டிக்கப்பட்ட அனைத்து இடங்களிலும் மின் இணைப்பு வழங்கும் பணியில் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story