புயலால் வயர்கள், மின்சாதன பொருட்கள் சேதம்: கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் நிவாரணம் கேட்டு மனு


புயலால் வயர்கள், மின்சாதன பொருட்கள் சேதம்: கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் நிவாரணம் கேட்டு மனு
x
தினத்தந்தி 25 Nov 2018 4:00 AM IST (Updated: 25 Nov 2018 5:21 AM IST)
t-max-icont-min-icon

புயலால் வயர்கள், மின்சாதன பொருட்கள் சேதமானதால் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மனு கொடுத்தனர்.

திண்டுக்கல், 

‘கஜா’ புயலால் திண்டுக்கல் மாவட்டத்தில் ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. அதிலும் கொடைக் கானல், வேடசந்தூர், திண்டுக்கல் கிழக்கு, நத்தம் தாலுகாக்களில் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டது. இந்த பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே புயலால் கேபிள் டி.வி. வயர்கள், ஒளிபரப்புக்கு தேவையான மின்சாதன பொருட்கள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. இதனால் சில ஊர்களில் கேபிள் டி.வி. ஒளிபரப்பில் தடை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் முன்னேற்ற சங்கத்தினர், திண்டுக் கல்லில் உள்ள கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கு வந்தனர்.

பின்னர் புயலால் கேபிள் டி.வி. வயர்கள், மின்சாதன பொருட்கள் சேதமாகி இருப்பதால் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று மனு கொடுத்தனர். இது குறித்து கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் கூறியதாவது:-

மாவட்டம் முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட கேபிள் டி.வி. இணைப்புகள் உள்ளன. மொத்தம் 914 ஆபரேட்டர்கள் இருக்கிறோம். ‘கஜா’ புயலால் கொடைக்கானல், வேடசந்தூர் உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் கேபிள் டி.வி. சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. கேபிள் டி.வி. வயர்கள், ஒளிபரப்புக்கு தேவையான மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்துள்ளன.

இதனால் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் ரூ.50 ஆயிரம் வரை நஷ்டம் அடைந்துள்ளனர். புதிய வயர்கள், மின்சாதன பொருட்கள் வாங்கி இணைப்பு கொடுத்துள்ளோம். எனவே, அரசு கேபிள் டி.வி. நிறுவனம் எங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் இந்த மாத கட்டணத்தை செலுத்துவதற்கு காலஅவகாசம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

Next Story