ஆரணி காய்கறி மார்க்கெட்டில் ரூ.2 கோடியில் புதிதாக 127 கடைகள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தகவல்
ஆரணி காய்கறி மார்க்கெட்டில் ரூ.2 கோடியே 37 லட்சத்தில் புதிதாக 127 கடைகள் கட்டப்படும் என்று அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறினார்.
ஆரணி,
ஆரணி, காந்தி ரோட்டில் நகராட்சிக்கு சொந்தமான காய்கறி மார்க்கெட் உள்ளது. நேற்று முன்தினம் மாலையில் 6 கடைகளின் மேற்கூரைகள் இடிந்து தரைமட்டமானது. இதனால் அருகில் கடை வைத்திருந்த வியாபாரிகள் மற்றும் காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓடினர். நல்ல வேளையாக எந்தவித விபரீதமும் ஏற்படவில்லை.
இதுபற்றி தகவல் அறிந்ததும் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், தூசி கே.மோகன் எம்.எல்.ஏ., செஞ்சி வி.ஏழுமலை எம்.பி., நகராட்சி ஆணையாளர் கே.அசோக்குமார் மற்றும் அதிகாரிகள் இடிந்து விழுந்த கடைகளையும், பாழடைந்த கடைகள் இடித்துதள்ளப்பட்ட இடத்தில் தற்காலிக மார்க்கெட் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், காய்கறி மார்க்கெட்டில் உள்ள கடைகளை இடித்துவிட்டு ரூ.2 கோடியே 37 லட்சம் மதிப்பில் புதிதாக 127 கடைகள் கட்டுவதற்கு திட்ட மதிப்பீடு செய்து தயாராக உள்ளது. இப்பணியை தொடர வியாபாரிகளே சரிவர ஒத்துழைப்பு வழங்காததால் இப்பணி தொடர முடியவில்லை. வியாபாரிகளிடமும், கலெக்டரிடமும் பேசி நகராட்சி எதிரே வெங்கட்ராமன் பூங்கா பின்புறம் உள்ள நகராட்சி காலியிடத்தில் தற்காலிக மார்க்கெட் அமைத்து கொடுப்பதற்கு முடிவு செய்யப்படும்’ என்றார்.
ஆய்வின் போது அரசு வக்கீல் கே.சங்கர், ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் பாரி பி.பாபு, ஒன்றிய செயலாளர்கள் பி.ஆர்.ஜி.சேகர், எம்.வேலு, அரசு அலுவலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், வியாபாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story