அடிப்படை வசதி இல்லாத பெரம்பூர் தாசில்தார் அலுவலகம் பொதுமக்கள் புகார்


அடிப்படை வசதி இல்லாத பெரம்பூர் தாசில்தார் அலுவலகம் பொதுமக்கள் புகார்
x
தினத்தந்தி 26 Nov 2018 4:30 AM IST (Updated: 25 Nov 2018 11:01 PM IST)
t-max-icont-min-icon

பெரம்பூர் தாசில்தார் அலுவலகத்தில் அடிப்படை வசதிகள் இல்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

பெரம்பூர்,

சென்னை வியாசர்பாடி, சர்மாநகர், கொடுங்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வருமானம், சாதி, பிறப்பு, இறப்பு மற்றும் பட்டா பெயர் மாற்றம், முதியோர் பென்சன் திட்டம் உள்ளிட்டவைகளுக்கு சான்றிதழ்கள் பெற தினமும் 500 முதல் ஆயிரம் பேர் வரை பெரம்பூர் தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று வருகின்றனர்.

இவர்களில் பெரும்பாலும் முதியவர்கள் மற்றும் கைக்குழந்தைகளுடன் வரும் பெண்களே அதிகளவில் வருகின்றனர். இவ்வாறு வரும் பொதுமக்கள் அமர்ந்து ஓய்வு எடுக்க வசதியாக தாசில்தார் அலுவலக வளாகத்தில் ஓய்வறை கட்டப்பட்டு, அதில் இருக்கைகள் போடப்பட்டு உள்ளது.

கடந்த சில மாதங்களாக ஓய்வறையில் போடப்பட்டு உள்ள சில இருக்கைகள் சேதம் அடைந்து பயன்பாடு இன்றி கிடக்கிறது. அறையை சுத்தம் செய்யாமல் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. தரை பெயர்ந்து மண் குவியலாக கிடக்கிறது. இதனால் ஓய்வறைக்கு வரும் முதியவர்கள், குழந்தைகளுடன் வரும் பெண்கள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

குடிநீர், கழிவறை உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை எனவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். கழிவறை செல்லவேண்டுமானால் எதிரே உள்ள பெரம்பூர் ரெயில் நிலையத்துக்கு செல்லவேண்டிய நிலை உள்ளதால் பெண்கள், முதியவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் தாசில்தார் அலுவலகத்தில் எந்த வேலை நடக்கவேண்டும் என்றாலும் வெளியே அமர்ந்து இருக்கும் தரகர்களை அணுகினால் மட்டுமே முடியும் என்ற அவல நிலையும் உள்ளது. அவர்கள் இல்லாமல் நேரடியாக சான்றிதழ்களை வாங்க முயன்றால் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளால் வேண்டுமென்றே அலைக்கழிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

எனவே தாசில்தார் அலுவலகத்தில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதுடன், ஓய்வறையை சுத்தம் செய்து, பழுதடைந்த இருக்கைகளை சீரமைத்து தரவேண்டும். தரகர்கள் ஆதிக்கத்தை தவிர்த்து, நேரடியாக சான்றிதழ்களை கேட்டு விண்ணப்பம் செய்பவர்களை அலைக்கழிக்காமல் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story