அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் தர்மபுரி மாநாட்டில் வலியுறுத்தல்
அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் தொடர் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு தர்மபுரியில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவுரன் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சுருளிநாதன், பொன்ரத்தினம், ஆனந்தன், பாஸ்கரன், பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த மாநாட்டில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில செய்தி தொடர்பாளர் தியாகராஜன் கலந்து கொண்டு தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார்.
கூட்டத்திற்கு பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதிய பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தினை வரும் டிசம்பர் 4-ந் தேதி முதல் நடத்த திட்டமிட்டிருந்தோம். கஜா புயல் காரணமாக தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஜாக்டோ ஜியோவில் அங்கம் வகிக்கின்ற சங்கங்களை சேர்ந்தவர்கள் பல நாட்களாக நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.
புயல் பாதித்த மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களது ஒருநாள் ஊதியத்தினை சுமார் ரூ.80 கோடி நிவாரண நிதிக்கு வழங்குவது என முடிவு செய்துள்ளோம். கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக தமிழக முதல்-அமைச்சர் மத்திய அரசிடம் ரூ.13 ஆயிரம் கோடி நிவாரண உதவி கோரியுள்ளார்.
1.4.2003 ஆம் ஆண்டிற்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தவர்கள் பங்களிப்பு ஓய்வூதியத்திற்காக செலுத்தியுள்ள தொகை சுமார் ரூ.13 ஆயிரம் கோடி. அதற்கு இணையாக தமிழக அரசு செலுத்தவேண்டிய தொகை ரூ.13 ஆயிரம் கோடி இதன்படி ரூ.26 ஆயிரம் கோடி தமிழக அரசிடம் உள்ளது. தமிழக அரசு ஏன் மத்திய அரசிடம் கையேந்த வேண்டும். அந்த பணத்தினை கஜா புயல் நிவாரணத்திற்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story