ராயக்கோட்டையில் கர்ப்பிணியை இரும்பு கம்பியால் தாக்கி நகை பறிப்பு


ராயக்கோட்டையில் கர்ப்பிணியை இரும்பு கம்பியால் தாக்கி நகை பறிப்பு
x
தினத்தந்தி 25 Nov 2018 11:00 PM GMT (Updated: 25 Nov 2018 5:50 PM GMT)

ராயக்கோட்டையில் நிறைமாத கர்ப்பிணியை இரும்பு கம்பியால் தாக்கி 6 பவுன் நகையை மர்ம ஆசாமி பறித்து சென்றான்.

ராயக்கோட்டை, 

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள அயர்னப்பள்ளி ஊராட்சி பாலேபுரத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி கவுரம்மா. இவர் தற்போது ராயக்கோட்டையில் அப்பைய நாயுடு நகரில் வசித்து வருகிறார். இவரது மகள் லட்சுமி (வயது 25). இவரது கணவர் விஜய். இவர் துபாயில் பணிபுரிந்து வருகிறார். விஜய் தஞ்சாவூர் அருகே உள்ள அய்யம்பேட்டையைச் சேர்ந்தவர் ஆவார்.

லட்சுமியும், விஜயும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் ஆவார்கள். லட்சுமி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் விஜய் துபாயில் இருந்து ராயக்கோட்டையில் உள்ள தனது மனைவியின் ஊருக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் இரவு லட்சுமி வீட்டின் வெளிப்புறமாக உள்ள சுகாதார வளாகத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

அந்த நேரம் அந்த பகுதியில் மறைந்திருந்த மர்ம ஆசாமி ஒருவர், கர்ப்பிணி லட்சுமியை இரும்பு கம்பியால் தலையில் தாக்கி அவர் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார். லட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் லட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து ஆபரேசன் மூலம் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

தலையில் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டுள்ளதால் லட்சுமிக்கு தலையில் 9 தையல்கள் போடப்பட்டுள்ளன. தற்போது அவர் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ராயக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கர்ப்பிணியை இரும்பு கம்பியால் தாக்கி நகை பறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story