கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒரு வாரத்தில் மின்வினியோகம் அமைச்சர் தங்கமணி தகவல்


கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒரு வாரத்தில் மின்வினியோகம் அமைச்சர் தங்கமணி தகவல்
x
தினத்தந்தி 26 Nov 2018 4:15 AM IST (Updated: 26 Nov 2018 12:04 AM IST)
t-max-icont-min-icon

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இன்னும் ஒரு வாரத்தில் மின்வினியோகம் சீரடையும் என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே உள்ள மானுவக்காட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 45). இவர் மல்லசமுத்திரம் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். சமீபத்தில் ஏற்பட்ட கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியில் மின் கம்பங்களை சீரமைக்கும் பணிக்கு முருகேசன் சென்றார். அப்போது மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்தார். இதையடுத்து மின்சாரம் தாக்கி உயிரிழந்த முருகேசனின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.15 லட்சம் நிதி உதவியும், குடும்பத்தில் தகுதியைக் கொண்டு, ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என அறிவித்தது.

இதனையடுத்து, தமிழக மின்துறை அமைச்சர் பி.தங்கமணி, பி.ஆர்.சுந்தரம் எம்.பி., பொன்.சரஸ்வதி எம்.எல்.ஏ. நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் உள்ளிட்டோர் நேற்று மானுவக்காட்டுப்பாளையத்திற்கு சென்று, உயிரிழந்த மின்வாரிய ஊழியர் முருகேசன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். மேலும் முருகேசனின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து முதல் கட்டமாக முருகேசனின் குடும்பத்தினருக்கு மின் வாரியத்தின் சார்பில் ரூ.2 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் பி.தங்கமணி வழங்கினார். பின்னர் அமைச்சர் பி.தங்கமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

கஜா புயல் சீரமைப்பு பணியின் போது மின்சாரம் தாக்கி இறந்த முருகேசன் குடும்பத்துக்கு முதல்-அமைச்சர் ரூ.15 லட்சம் நிதி அறிவித்திருந்தார். இதில் முதல் கட்டமாக ரூ.2 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மீதி தொகை ரூ.13 லட்சத்திற்கான காசோலை இன்னும் 2 நாட்களில் வழங்கப்படும்.

மின்வாரிய ஊழியர்கள் எந்த அளவுக்கு அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சான்று. கஜா புயலால் ஒரு லட்சத்து 13 ஆயிரம் மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன. 4 மாவட்டங்களிலும் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சீரமைப்பு பணி முடிவடைந்து மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. ஊரக பகுதிகளுக்கு மின்சாரம் வழங்க இன்னும் ஒரு வாரம் ஆகும். பணி முழுவீச்சில் நடப்பதால் புயல் பாதித்த மாவட்டங்களில் அனைத்து பகுதியிலும் ஒரு வாரத்தில் மின்வினியோகம் சீரடையும்.

பாதிப்பை எதிர்பார்த்து 70 ஆயிரம் மின்கம்பங்கள் இருப்பு வைத்திருந்தோம். ஆனால் எதிர்பார்த்ததை விட அதிக மின் கம்பங்கள் சேதமானதால் ஆந்திராவில் இருந்து மின் கம்பங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. அனைத்து மின் கருவிகளும் தேவையான அளவுக்கு உள்ளது. வயல்வெளிகளில் மின்கம்பங்கள் உள்ள மின்மாற்றிகளுக்கு இடையில் அதிக தூரம் உள்ளது. சீரமைப்பு பணியில் 22 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆந்திராவில் இருந்து 800 பேரும், கேரளாவில் இருந்து 500 பேரும், கர்நாடகாவில் இருந்து 600 பேரும் வந்துள்ளனர்.

அவர்களையும் பயன்படுத்தி சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். முதல்-அமைச்சர் பிரதமரை சந்தித்த போது ரூ.15 ஆயிரம் கோடி நிதி கேட்டுள்ளார். முதல் கட்டமாக ரூ.1500 கோடி நிதி கேட்டுள்ளார். மின்வாரியத்தில் மட்டும் ரூ.1500 கோடி சேதம் இருக்கும். அதிக இழப்பு மின்வாரியத்துக்கு தான் என கேட்டு இருக்கிறோம். மின் வாரியத்துக்கு முதல்கட்டமாக ரூ.200 கோடி வழங்கி உள்ளார்கள்.

பொதுமக்களை பொறுத்தவரை எந்த பிரச்சினையும் இல்லை. சில அரசியல் கட்சிகள் ஆளும் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த மறியல் செய்கிறார்கள். இதனால் மின்வாரிய ஊழியர்களின் பணிகள் கூட பாதிக்கப்பட்டது. அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரும் அனைத்து பகுதிகளையும் சென்று பார்வையிடுகிறோம். ஆனாலும் எதிர்க்கட்சியினர் போராட்டத்தை தூண்டி விடுகின்றனர். இதனை முறியடித்து எங்கள் பணிகளை தொடர்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் துணை கலெக்டர் பாஸ்கரன், தாசில்தார் சுப்பிரமணியம், சங்ககிரி மின்வாரிய செயற்பொறியாளர் பாலசுப்பிரமணி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ராணி, மல்லசமுத்திரம் நகர அ.தி.மு.க. செயலாளர் சுந்தரராஜன், பூத் குழந்தைவேலு, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் கந்தவேலு, சண்முகம் மற்றும் மின்வாரிய அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொணடனர்.

Next Story