‘கஜா’ புயல் நிவாரணமாக ஒருநாள் ஊதியத்தை வழங்கிட அரசாணை வெளியிட வேண்டும் ஜாக்டோ-ஜியோ ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
‘கஜா’ புயல் நிவாரணமாக ஒருநாள் ஊதியத்தை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வழங்கிடும் வகையில் அரசாணை வெளியிட வேண்டும் என நாமக்கல்லில் நடந்த ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாமக்கல்,
பழைய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்தமாதம் (டிசம்பர்) 4-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக ஆலோசிக்க நாமக்கல் மாவட்ட ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பூபதி தலைமை தாங்கினார். மற்றொரு ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன் வரவேற்று பேசினார். இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி, உயர்மட்டக்குழு உறுப்பினர் செல்வராஜூ மற்றும் ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், ஜெகதீசன், முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தமிழகம் ழுழுவதும் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் மாதம் 4-ந் தேதி நடைபெற உள்ள காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களையும் பங்கேற்க செய்வது.
‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தங்கள் ஊதியத்தில் இருந்து ஒருநாள் ஊதியத்தை நிவாரணமாக வழங்கிடும் வகையில் அரசாணை வெளியிட தமிழக அரசை கேட்டுக்கொள்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் ஒருசில ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story