திருச்செந்தூர்-ஸ்ரீவைகுண்டம் இடையே 2-வது முறையாக நீராவி என்ஜின் ரெயில் இயக்கம் கலெக்டர் சந்தீப் நந்தூரி குடும்பத்தினருடன் பயணம்


திருச்செந்தூர்-ஸ்ரீவைகுண்டம் இடையே 2-வது முறையாக நீராவி என்ஜின் ரெயில் இயக்கம் கலெக்டர் சந்தீப் நந்தூரி குடும்பத்தினருடன் பயணம்
x
தினத்தந்தி 26 Nov 2018 4:00 AM IST (Updated: 26 Nov 2018 12:17 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர்- ஸ்ரீவைகுண்டம் இடையே 2-வது முறையாக இயக் கப்பட்ட பழமையான நீராவி என்ஜின் ரெயிலில் கலெக்டர் சந்தீப் நந்தூரி குடும்பத்தினருடன் பயணம் செய்தார்.

திருச்செந்தூர், 

திருச்செந்தூர்- ஸ்ரீவைகுண்டம் இடையே 2-வது முறையாக இயக் கப்பட்ட பழமையான நீராவி என்ஜின் ரெயிலில் கலெக்டர் சந்தீப் நந்தூரி குடும்பத்தினருடன் பயணம் செய்தார்.

பழமையான ரெயில்

இங்கிலாந்து நாட்டில் 1855-ம் ஆண்டில் இ.ஐ.ஆர்.21 மற்றும் இ.ஐ.ஆர்.22 என்ற 2 நீராவி என்ஜின் கொண்ட ஹெரிடேஜ் ரெயில்கள் தயாரிக்கப்பட்டன. இவை 1857-ம் ஆண்டு இந்தியா கொண்டு வரப்பட்டு குறிப்பிட்ட ரெயில் வழித்தடங்களில் சேவையாற்றியது. சுமார் 55 ஆண்டுகள் சேவைக்கு பிறகு இந்த நீராவி என்ஜின்கள் ஹவுரா மற்றும் ஜமால்பூரில் நிறுத்தப்பட்டன. அங்கு சிதிலமடைந்து நீராவி என்ஜின் பாகங்கள் காணாமல் போனது.

இதனையடுத்து தெற்கு ரெயில்வே நிர்வாகம் இ.ஐ.ஆர்.21 நீராவி ரெயில் என்ஜினை பராமரிப்பு செய்தது. பின்னர் பாரம்பரிய ரெயில் சேவை திட்டத்தில் உலகிலேயே பழமையான நீராவி என்ஜின் உள்ள இந்த ரெயில், குறிப்பிட்ட வழித்தடங்களில் அவ்வப்போது இயக்கப்பட்டு வருகின்றன.

2-வது முறை

கடந்த 17-ந் தேதி ஏற்கனவே திருச்செந்தூர்-ஸ்ரீவைகுண்டம் இடையே இந்த ரெயில் இயக்கப்பட்டது. இந்த நிலையில் ரெயில் பயணிகளை மகிழ்விக்க 2-வது முறையாக இந்த தடத்தில் நேற்று இயக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி ரெயிலை நேற்று திருச்செந்தூர் ரெயில் நிலையத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருச்செந்தூரில் இருந்து ஸ்ரீவைகுண்டம் வரை இந்த ரெயில் 2-வது முறையாக இயக்கப்படுகிறது. இந்த இ.ஐ.ஆர்.21 நீராவி என்ஜின் ரெயில் மிகவும் பழமையானது. இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டு இந்தியா கொண்டுவரப்பட்டு நீண்ட காலம் ரெயில்வேயில் சேவையாற்றியது. அதன்பிறகு இதனை ரெயில்வே நிர்வாகம் பழமையான ரெயில் சேவையை போற்றும் வகையில் தமிழகம் முழுவதும் இயக்கி வருகிறது. இந்த ரெயிலுடன் இணைந்து தயாரிக்கப்பட்ட இ.ஐ.ஆர்.22 பழமையான நீராவி என்ஜின் ரெயில் உலக அளவில் கின்னஸ் சாதனை படைத்தது. தற்போது இந்த பழமையான நீராவி என்ஜின் ரெயிலில் பயணம் செய்வது சிறந்த அனுபவத்தை தரும். இதேபோல் மேலும் 2 முறை இயக்கப்பட உள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்ட மக்கள் பயணம் செய்யலாம்.

இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து கலெக்டரின் மனைவி பரிதா அட்ஷா கூறும்போது, உண்மையிலேயே இந்த பழமையான நீராவி என்ஜின் ரெயிலில் பயணம் செய்வது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

யார்-யார்?

இந்த நிகழ்ச்சியில் திருச்செந்தூர் உதவி கலெக்டர் கோவிந்தராசு, தாசில்தார் தில்லைபாண்டி, மண்டல துணை தாசில்தார் கோமதிசங்கர், ரெயில்வே கோச்சிங் டிப்போ அதிகாரி கர்ஷா, ரெயில்வே போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியம், வணிக இன்ஸ்பெக்டர் மாணிக்கம், திருச்செந்தூர் ரெயில் நிலைய மேலாளர் ஜேம்ஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ரெயிலில் கலெக்டர் சந்தீப் நந்தூரி, அவருடைய மனைவி பரிதா அட்ஷா, 6 வயது மகன் சம்மரத் நந்தூரி, ரெயில்வே அதிகாரிகள் மற்றும் 10 பெண்கள் உள்பட 35 பயணிகள் பயணம் செய்தனர். திருச்செந்தூரில் இருந்து காலை 10.15 மணிக்கு ரெயில் புறப்பட்டு ஸ்ரீவைகுண்டத்திற்கு மதியம் 12.50 மணிக்கு சென்றடைந்தது.

Next Story