கூடுதல் விலைக்கு உரங்களை விற்றால் கடும் நடவடிக்கை விற்பனையாளர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரங்களை விற்றால் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரங்களை விற்றால் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
நாற்றங்கால் தயாரிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் மானாவாரி பகுதியில் சோளம், மக்காச்சோளம், கம்பு, உளுந்து, பாசிப்பயறு, எள், நிலக்கடலை, சூரியகாந்தி மற்றும் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. தாமிரபரணி பாசனப் பகுதிகளில் நெல் நாற்றாங்கால் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த ஆண்டு நல்ல மழை பெய்து உள்ளதாலும், மண்ணில் ஈரப்பதம் இருப்பதாலும், விவசாயிகள் மானாவாரிப் பயிர்களுக்கும் நஞ்சையில் வாழைப் பயிருக்கும் மேலுரமாக யூரியா இட்டு வருகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு இந்த பருவத்துக்கான உரத்தேவையை கணக்கிட்டு தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் போதுமான உரம் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி தற்போது, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் 750 டன் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் 1422 டன் யூரியா இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.
நடவடிக்கை
உர விற்பனையாளர்கள் உரக்கட்டுப்பாடு சட்டத்தின்படி தங்களிடம் உள்ள உர இருப்பு மற்றும் விற்பனை விலையை விற்பனை நிலையத்துக்கு முன்பாக விளம்பரப் பலகையில் எழுதி வைக்க வேண்டும். உரங்களை விற்பனை முனைய கருவி மூலமாக பட்டியலிட்டு அந்தந்த உரத்துக்கான கட்டுப்பாட்டு விலையில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக் கூடாது. கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்வது தெரிய வந்தால் உரக்கட்டுப்பாடு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பறக்கும்படை
இது தொடர்பாக ஆய்வாளர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்ட போது, விளாத்திகுளம், பேய்க்குளம் ஆகிய இடங்களில் உள்ள 2 உர விற்பனை நிலையங்கள் உரக்கட்டுப்பாட்டு சட்டத்தை மீறி உரம் விற்பனை செய்து இருப்பது தெரியவந்தது. இதனால் 2 விற்பனை நிலையங்களுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
உர விற்பனையை கண்காணிக்க வேளாண்துறை அதிகாரிகளை கொண்டு பறக்கும் படை அமைத்து விதிகளை மீறும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
எனவே விவசாயிகள் தாங்கள் வாங்கும் உர மூட்டையில் குறிப்பிடப்பட்டு உள்ள விற்பனை விலைக்கு கூடுதலாக விற்பனை செய்தால், உடனடியாக வேளாண் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
தற்போது, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் பருவத்துக்கு தேவையான ரசாயன உரங்கள் இருப்பு வைக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. எனவே விவசாயிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களை அதிக அளவில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இருப்பு வைப்பு
மேலும் இந்த மாத தேவையை பூர்த்தி செய்ய 4 ஆயிரம் டன் யூரியா ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதுவரை 2 ஆயிரத்து 300 டன் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் 1700 டன் வினியோகம் செய்யப்பட உள்ளது. எனவே விவசாயத்துக்கு உரம் தட்டுப்பாடு இன்றி கிடைக்க, போதிய அளவு உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. இதனை விவசாயிகள் மண்வள அட்டை பரிந்துரையின்படி பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story