காங்கேயம் அருகே அரசு பஸ் கண்டக்டர் வீட்டில் ரூ.4¾ லட்சம் திருட்டு
காங்கேயம் அருகே அரசு பஸ் கண்டக்டரின் வீடு புகுந்து 7 பவுன் நகை, ரூ.4¾ லட்சத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். மகள் திருமணத்துக்காக குடும்பத்துடன் கண்டக்டர் திருமண மண்டபத்துக்கு சென்றிருந்த போது இந்த துணிகர சம்பவம் நடந்து உள்ளது.
காங்கேயம்,
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே படியூரை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 52). இவர் காங்கேயம் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி லட்சுமி(50). இவர்களுக்கு கற்பகம்(30), கோமதி(27), சத்யா(24) என 3 மகள்கள் உள்ளனர். இவரது 2–வது மகள் கோமதிக்கு காங்கேயத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று திருமணம் நடந்தது. இதற்காக நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருமண மண்டபத்திற்கு சென்று விட்டனர்.
நேற்று பகல் 11 மணிக்கு திருமணம் முடிந்து மணமக்களுக்கு சடங்குகள் செய்வதற்காக வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் கதவு கடப்பாரையால் உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து பழனிசாமி அதிர்ச்சி அடைந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது 2 பீரோக்களும் உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிகள் மற்றும் உள்ளே இருந்த பொருட்கள் வீடு முழுவதும் சிதறி கிடந்தன.
மகள் திருமண செலவுக்காக பீரோவில் வைக்கப்பட்டு இருந்த ரூ.4 லட்சத்து 75 ஆயிரம் ரொக்கம், 7 பவுன் தங்க நகைகளை காணவில்லை. வீடு புகுந்த மர்ம ஆசாமிகள் அந்த ரூ.4¾ லட்சத்தையும், 7 பவுன் நகையையும் திருடி விட்டு தப்பி சென்று இருக்கிறார்கள். இது குறித்து காங்கேயம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த காங்கேயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையான போலீசார் திருட்டு நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.
பின்னர் திருப்பூரில் இருந்து வெற்றி என்னும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் வெற்றி வீட்டில் இருந்து மோப்பம் பிடித்து விட்டு முன் வாசல் வழியாக காங்கேயம்–திருப்பூர் மெயின் ரோட்டுக்கு சென்றது. பின்னர் அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து விட்டது. திருட்டு நடந்த வீட்டில் மர்ம ஆசாமிகளின் கைரேகைகள் ஏதேனும் பதிவாகி இருக்கிறதா? என கைரேகை நிபுணர்களும் ஆய்வு செய்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருமணத்துக்காக மணப்பெண் தன்னுடைய நகைகள் அனைத்தையும் அணிந்து கொண்டு சென்று விட்டதாலும், வீட்டில் ஒரு பழைய சூட்கேஸ் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 10 தங்க காசுகள், 10 பவுன் நகைகள் மர்ம ஆசாமிகளின் கண்களில் படாததாலும் அதில் உள்ள நகைகள் அனைத்தும் தப்பியது குறிப்பிடத்தக்கது.
இந்த துணிகர திருட்டு குறித்து காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.